சந்ததமும் எனதுசெயல் நினதுசெயல் யானெனுந் | தன்மைநினை யன்றியில்லாத் | தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த | சமரச சுபாவமிதுவே | இந்தநிலை தெளியநான் நெக்குருகி வாடிய | இயற்கைதிரு வுளமறியுமே | இந்நிலையி லேசற் றிருக்கஎன் றால்மடமை | இதசத்ரு வாகவந்து | சிந்தைகுடி கொள்ளுதே மலமாயை கன்மந் | திரும்புமோ தொடுவழக்காய்ச் | சென்மம்வரு மோஎனவும் யோசிக்கு தேமனது | சிரத்தையெனும் வாளும் உதவிப் | பந்தமற மெய்ஞ்ஞான தீரமுந் தந்தெனைப் | பாதுகாத் தருள்செய்குவாய் | பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற | பரிபூர ணானந்தமே. |