பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

237
கற்பியாமல் கற்பித்தருளிய நின் திருவருளினுக்கு அடியேன் கைம்மாறாகக் காட்டுவதற்கு எளியேன்பால் என்னுளது? (ஏதுமில்லை.)

     "குற்றேவல்நான் . . . செல்வமே" - நின்திருவருளுக்கு அடியேன் குற்றேவலன்; இருள் செறிந்த மேனியொடு குழிந்தாழ்ந்த முண்டக் கண்ணும், பிறைபோலும் வளைந்த கோரப்பல்லும், கண்டோர் நடுங்கிக் கண்மூடும் படியான பெருத்த கொடிய வடிவமும் உள்ள கூற்றுவனே! நீ உன்னைப்போன்ற ஒரு பெரிய கரிய எருமைக்கடா மீது ஏறிவந்து என்னை மருட்டுவது உனக்குப் பொருந்தாது அடா, உன்னுடைய பயனில் முயற்சியாகிய வெறுங்காசு நம்மிடத்துச் செல்லாதடா என்று (வீறுகொண்டு சீறி வன்மையாகக்) கூற வாய் தந்தருளிய அழியாப் பேரருட்செல்வமே!

         "சத்தாகி . . . ஆனந்தமே"

     (வி - ம்.) தரித்து - தாங்கி; கொண்டு, ஏழை-அறிவில்லாதவன். உண்மைஞானம் - திருவடியுணர்வு. அல் - கருமை. ஆர்ந்த - செறிந்த; நிறைந்த. பகடு - எருமை. பகட்டால் என்பதற்கு மிடுக்கினால் எனப் பொருள் கோடலும் ஒன்று.

     ஆலமிடற்றானடியார்க்குக் கூற்றுவன் அஞ்சுமுண்மை வருமாறு :

"வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
 மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
 மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
 ஆலமிடற் றானடியா ரென்றடர வஞ்சுவரே."
- 2. 48 - 5.
"சாற்றி னேன்சடை நீண்முடிச் சங்கரன்
 சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி
 ஆற்ற வுங்களிப் பட்ட மனத்தராய்ப்
 போற்றி யென்றுரைப் பார்புடை போகலே."
- 5. 92 - 4.
"பட்டிக் கடாவில் வருமந்த காவுனைப் பாரறிய
 வெட்டிப் புறங்கண் டலாது விடேன்வெய்ய சூரனைப்போய்
 முட்டிப் பொருதசெவ் வேற்பெரு மாள்திரு முன்புநின்றேன்
 கட்டிப் புறப்ப டடாசத்தி வாளென்றன் கையதுவே."
- கந்தரலங்காரம், 64.
(9)