பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

236
அம்பொனடிக் கீழ்வைப்பன் அருங்களங்கம் அறுக்கும்
 அக்குளிகை தானும்போன் னாகா தாகும்
உம்பர்பிரான் உற்பத்தி யாதிகளுக் குரியன்
 உயிர்தானுஞ் சிவானுபவம் ஒன்றினுக்கு உரித்தே."
- சிவஞான சித்தியார், 11. 2-3.
"கந்துகம்" என ஒருமொழியாகக் கொள்ளின் குதிரை எனப் பொருள்படும். அப்பொழுது குதிரையை அடக்கலாம் எனக் கொள்க.

(8)
 
எல்லாம் அறிந்தவரும் ஏதுமறி யாதவரும்
    இல்லையெனு மிவ்வுலகமீ
  தேதுமறி யாதவ னெனப்பெயர் தரித்துமிக
    ஏழைக்குள் ஏழையாகிக்
கல்லாத அறிவிற் கடைப்பட்ட நான்அன்று
    கையினால் உண்மைஞானங்
  கற்பித்த நின்னருளி னுக்கென்ன கைம்மாறு
    காட்டுவேன் குற்றேவல்நான்
அல்லார்ந்த மேனியொடு குண்டுகட் பிறைஎயிற்
    றாபாச வடிவமான
  அந்தகா நீயொரு பகட்டாற் பகட்டுவ
    தடாதடா காசுநம்பால்
செல்லா தடாஎன்று பேசுவா யதுதந்த
    செல்வமே சத்தாகிஎன்
  சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
    தேசோ மயானந்தமே.
     (பொ - ள்) "எல்லா . . . காட்டுவேன்" - இவ்வுலகின்கண் அனைத்துநூலும் அறிந்த பேரறிஞர்களும், ஒன்று கூடத்தெரியாத முழுமூடர்களும் காண்பதற்கில்லை என்று, சொல்லப்படுமிடத்து அடியேன் ஒன்றும் அறியாத வெறும் ஏழைக்குள் எல்லாம் ஏழையாகியுள்ளேன். (வேண்டுவன) கல்லாத அறிவினால் கடைப்பட்ட எளியேன் என்று அந்நாளில் நின்திருக்கையின் அறிவடையாளத்தால் (முப்பொருள் உண்மையினையும் செப்பற்கரிய புணர்ப்பின் செம்மையினையும் எழுத்தும் சொல்லுமாயில்லாமல் குறிப்பால்) திருவடியுணர்வினைக்