(பொ - ள்) "கந்துக . . . ஏவல்கொளலாம்" - கட்டுத்தறியினை முரித்துத் தள்ளும்படியான மதமிக்க யானையையும் நம் வயப்படும் படி நடத்துதல் கூடும்; கொல்லுங் கொடுமைவாய்ந்த கரடியையும் கொடிய புலியையும் வாய்திறக்கவொட்டாது கட்டிவிடலாம்; ஒப்பில்லாத சிங்கத்தின் முதுகின்மேல் ஏறி அமர்ந்திருத்தலும் ஊர்ந்து செல்லுதலும் கூடும்; கட்செவி எனப்படும் நச்சுப்பாம்பினைப் புற்றினின்றும் எடுத்து ஆட்டுதலும் செய்யலாம். சூடுமிக்க தழலில் பாதரசத்தினை விட்டு (கரும்பொன், பசும்பொன், வெண்பொன், செம்பொன், கரிப்பொன்) ஐந்துமுதற் பொருளாகிய உலகங்களையும் தீண்டிவேறாக்கும் செய்கையால் மாற்றுயர்ந்த பொன்னாக்கி அவற்றை விற்று உண்ணுதலும் செய்யலாம்; இவ்வுலகத்திலே எவரையும் மறைக்கும் இயல்புவாய்ந்த மந்திர மையொன்றணிந்து எவருங் காணாதவகையாக எங்கும் சுற்றித் திரியலாம். விண்ணுள்ளாராகிய தேவர்களையும் இட்ட வேலையினைத் தட்டின்றி இயற்றும்படி ஏவல் கொள்ளலாம்;
"சந்ததமு . . . திறமரிது" - எந்நாளும் இளமை நீங்காது வளமைப் பொலிவுடன் இன்புற்றிருக்கலாம்; வேறோ ருடம்பின்கண்ணும் நுழையலாம்; பெருக்கெடுத்துவரும் தண்ணீரின்மேல் (தரையில் நடப்பதுபோல்) நடக்கலாம்; (நெருங்கவும் ஒண்ணாத) பெருந்தீயின் மேல் இருக்கலாம்; தமக்கு ஒப்பில்லாத பேறெனப்படும் பெரிய சித்திகளையும் பெற்றுக்கொள்ளலாம்; (ஆனால்) தம்முடைய மனத்தின் ஒரு நிலையாகிய நாட்டம் எனப்படும் சிந்தையினைத் திருவருளால் அடக்கி நம்வழிப்படுத்துச் சிவனே என்று இருக்கும் செய்திறம் பெறுதல் நனிமிக அருமையுடைத்தாகும்;
"சத்தாகி . . . ஆனந்தமே"
(வி - ம்.) கந்து - கட்டுத்தறி, உக - முரிய. ஒரு - ஒப்பில்லாத. கட்செவி - கண்ணையே செவியாகவுடைய பாம்பு. இரதம் - பாதரசம். வேதித்து - வேற்றுநிலையாக்கி. சந்ததமும் - எப்பொழுதும். சரீரம் - உடம்பு. சலம் - நீர், கனல் - தீ. நிகரில் - ஒப்பில்லாத. சித்தி - பேறு. சும்மாவிருத்தல் - சிவனே என்றிருத்தல். கரும்பொன் - இரும்பு. பசும்பொன் - தங்கம். வெண்பொன்-வெள்ளி. செம்பொன் - செம்பு. கரிப்பொன் - ஈயம். கட்செவி யென்பதற்குக் கண்ணையே செவியாகவுடையது, செவியுறுப்பு இல்லாதது. இவையே பெருவழக்கு. ஆனால் ஓர் உறுப்புக்குறைந்தால் குறைந்த பொறியுடைய உயிர் என்பதன்றி ஓர் உறுப்பே இரண்டு வேறுபட்ட தொழிற்கும் ஆம் என்று கூறுவதில்லை. அதனால் கண்காணும் தொலைவிலிருந்து வரும் மெல்லிய ஓசையினையும் கேட்குந்தன்மை வாய்ந்த செவியுடையது பாம்பு. எனவே அவ்வுண்மை தோன்றவே கட்செவி என நுண்ணிதினாய்ந்து நம்முன்னோர் வழங்கினர்.
வேதிக்கும் உண்மை வருமாறு:
| "செம்பிரத குளிகையினால் களிம்பற்றுப் பொன்னாய்ச் |
| செம்பொனுடன் சேருமலஞ் சிதைந்தாற் சீவன் |
| நம்பனுடன் கூடுமெனில் பொன்போல் அல்லன் |
| நற்குளிகை போலஅரன் நணுகுமலம் போக்கி |