பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

234
நிலையிலும் ஆவி காணும் நிலையிலும் நின்று அடங்குவிப்பதும் அடங்குவதுமாகிய நிலையில் ஆவி ஆண்டானின் திருவடிப் பேரின்பத்தினை அறிந்தழுந்துதலாகிய அனுபவத்தினைக் கொள்ளும். ஆவி நீங்கேன் என்றும் நீக்கக்கூடாதென்றும் வேண்டிக்கொள்ளும் உண்மைவருமாறு:

"படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்செ னாவிற்கொண்டேன்
 இடைக்கல மல்லே னெழுபிறப் பும்முனக் காட்செய்கின்றேன்
 துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித்தூ நீறணிந்துன்
 அடைக்கலங் கண்டாய் அணிதில்லைச் சிற்றம் பலத்தரனே."
- 4. 81 - 8
"போற்றியோ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்
 போற்றியோ நமச்சி வாய புகலீடம் பிறிதொன் றில்லை
 போற்றியோ நமச்சி வாய புறமெனைப் போக்கல் கண்டாய்
 போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி".
- 8. திருச்சதகம் - 42.
(7)
 
கந்துக1 மதக்கரியை வசமா நடத்தலாங்
    கரடிவெம் புலிவாயையுங்
  கட்டலாம் ஒருசிங்கம் முதுகின்மேற் கொள்ளலாங்
    கட்செவி எடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும்
    வேதித்து விற்றுண்ணலாம்
  வேறொருவர் காணாமல் உலகத் துலாவலாம்
    விண்ணவரை ஏவல்கொளலாஞ்
சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு
    சரீரத்தி னும்புகுதலாஞ்
  சலமேல் நடக்கலாங் கனல்மே லிருக்கலாந்
    தன்னிகரில் சித்திபெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
    திறமரிது சத்தாகிஎன்
  சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
    தேசோ மயானந்தமே.
 
 1. 
'தறிசெறு'. 8. அச்சப்பத்து, 8.