பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

254
     "பவ்வ . . . இருப்பனோ" - பெருங் கடலின்கண் காணப்படும் வெண்மை நிறம் பொருந்திய அலைகளால் கொடுக்கப்பட்ட குளிர்ச்சிமிக்க முத்துப்போன்ற நீர்த்துளிகளைக் (அடியேன் இரண்டு) கண்கள் சொரியவும், மொழி தடுமாறிப் (பண்ணொடு) பாடியும் ஆடியும் நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்து, மதிலின்கண் (கைவல்ல ஓவியத் தொழில் வல்லானால் வனப்புற) எழுதி யமைக்கப்பட்ட பாவையை ஒத்துச் சிறிதும் அசைதலின்றித் தெய்வத் தன்மை வாய்ந்த மெய்யன்பின் வடிவமாகி அவ்வன்பருடன் அகமுறக் கூடிப் பேரின்பப் பெருவீட்டில் (மீளா அடிமையாய் நிலைபெற்று இருப்பனோ?)

         "தெரிவ . . . விலாசமே" -

     (வி - ம்.) திரள் - கூட்டம். இதம் - இன்சொல், எனதென்பது - புறப்பொருள்களின் மேல் வைக்கும் கடும்பற்று. கவ்வை - துன்பம். கண்டம் - எல்லைக்குட்பட்டது. அகண்டம் - எல்லைக்குட்படாது எங்கும் நிறைந்தது. பவ்வம் - கடல். தண் - குளிர்ச்சி. தரளம் - முத்து. குளறுதல் - தடுமாறுதல். திவ்ய - தெய்வத் தன்மையான.

     ஓரிடத்திற் காணப்படும் திருவருட் பொலிவின் மெய்ம்மை கண்டு அத் தொடர்பின் வாயிலாய் யாண்டுந் திருவருட் பொலிவினையே கண்டு உள்ளம், உரை, உடலாகிய மூன்றினாலும் பேணவேண்டு மென்பது மெய்யன்பர்க ளனைவர்கட்கும் செய்தவமாகும். ஓர் அரிய பெரு நீர் நிலையின்கண் ஒருசார் நின்று பெரும்பயன் கொள்பவன் அந் நீரின் தொடர்பால் அந் நீர்நிலை யனைத்தையும் அகமுறப் பேணுவதவன்றன் தலைக் கடனாகும். மேலும் குடும்பம், நாடு, ஊர், பேரூர், மொழி, இனம், நெறி, தெய்வம் முதலிய தொடர்புகளால் அவற்றைச் சார்ந்தார் ஒவ்வொருவரும் முழுமையினையும் பேணும் இயல்பினை விழுத்தவமாகக் கொண்டொழுகுவதும் அவன்றன் நீங்காக் கடனாகும். இவை மேலதனுக் கொப்பாகும்.

     முதல்வனைப் பெரும்பரப்பு வடிவமாய் வழிபடுவதே பொருத்தமாமென்பார் பொய்ம்மையகற்று மெய்ம்மை "கண்ட யாவையும் அகண்டமெனக் கருதிக் கைகுவித்து மலர் தூவு" தல் என்பதனால் உணரலாம். எங்கு நிறைந்த (வானீரைத் தங்கவைக்க நிலமும் முகந்து பருகக் கலமும் போல் எங்கு நிறைந்த) இறைவன் முறையுறத் திருக்கோவில், சிவனடியார், சிவகுரவன், பல்லுயிர்களிலும், உலகத்திலும் தான் மிக்கோங்கி வெளிப்பட்டு விளங்கியருளுகின்றனன். அதனால் ஆண்டாண்டு வழிபட விதிக்கும் பொதுவிதி யாண்டுமாம். நிலையுணர்ந்து வழிபட விதிக்கும் சிறப்பு விதியுள் அடங்குமென்ப. எனினும் பொதுவழிபாட்டினும் சிறப்பு வழிபாட்டின் செம்மைக் குறிப்பு இருத்தல்வேண்டும். இவ்வழி பாட்டியல்புகள் வருமாறு:

"அதுஇது என்ற ததுவல்லான் கண்டார்க்
 கதுஇது என்றதையும் அல்லான்-பொதுவதனில்
 அத்துவித மாதல் அகண்டமுந் தைவமே
 அத்துவிதி அன்பிற் றொழு."
-சிவஞானபோதம், 12. 4 - 1.