பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

263
ஆருயிர்கள்தோறும் அவ்வுயிருக்குயிராக நீங்காது நின்றருளிப் பேரின்பப் பெருநிலையாகி (முதல்வன் மாற்றம் மனங்கடந்த மறையோனாய் மன்னும் சிறப்பினன் ஆதலின்) குறைவில்லாத அளவைகளானும் அளத்தற்கு ஒண்ணாத மிகவுந் தனியான மெய்ப்பொருளாய், மெய்யுணர்வினவாய், அடியும் முடியும் காட்டியருளாத (சத்தும்) அறிவாகிய (உயிருடன்கூடி) நிலைப்பொருளாகியும், திருவருட்கோயிலின் கண் செழித்து வீற்றிருந்தருளும் மெய்யாகிய தெய்வமே!

     "இனம்பிரிந்த . . . பேறே" - அடியேன் தன் இனத்தைவிட்டுப் பிரிந்த (திகைப்பெய்திச் செய்வகை அறியாது அல்லலுறும்) மானைப் போன்று வருந்தாதவண்ணம், திருவடிப் பேரின்பப் பெருவாழ்வைப் பெறும்வண்ணம், மெய்யடியார்களிடத்து (உறைத்து நிற்குமாறு) இருத்திவைத்தருளிச் சிறப்பைத் தந்தருளுகின்ற பெருஞ்சிறப்பே! குளிர்ச்சி மிகுந்த கனியாகப் பழுத்த பேரின்பமாகிய மிக்க இனிமை நிறைந்த கட்டிப்பேரூதியமே.

     (வி - ம்.) பதம் - நிலை அனந்தம் - அளவின்மை. சின்மாத்திரமாய் - மெய்யுணர்வின் அளவாய். இடைய - வருந்த. கனம் - சிறப்பு. பலித்த - பழுத்த. பேறு - ஊதியம்.

     அளவைகளுக்கு அப்பாற்பட்டவன் முதல்வன் என்பதனை வருமாறுணர்க :

"மறையினான் அயனான் மாலான் மனத்தினான் வாக்கான் மற்றுங்
 குறைவிலா அளவி னாலுங் கூறொணா தாகி நின்ற
 இறைவனார் கமல பாதம் இன்றுயான் இயம்பும் ஆசை
 நிறையினார் குணத்தோர்க் கெல்லாம் நகையினை நிறுத்து மன்றே."
-சிவஞானசித்தியார், அவையடக்கம்.
     "அசத்தென்பது சத்துக்கு மறுதலை யன்மையால் பொதுவியல்பு பற்றி அசத்தெனப்படுமாயினும், சிறப்பியல்புபற்றி அசத்தாதல் செல்லாமையின், சிறப்பியல்பு நோக்கும்வழி அவை சத்தாதற் கிழுக்கின்று. காரியப் பிரபஞ்சம் இத்துணைப்பொழுது நிற்குமென அறியவராது நிலைபெறுவது போலத் தோன்றி விரையக்கெட்டு மறைந்து போதற் சிறப்புடைமைபற்றி அசத்தென்று எடுத்துக்கொள்ளப்பட்டது." (ஆறாம் நூற்பா - சிவஞான முனிவர் பேருரை);

     இவ்வுண்மை உணராத ஒருபொருட் கொள்கையினர் அசத்தினை இன்மையெனக் கூறுவர். இன்மை - அபாவம். ஒருபொருட் கொள்கையர் - ஏகான்ம வரதிகள்; மாயா வாதிகள்,

(2)
 
பேறனைத்தும் அணுவெனவே உதறித் தள்ளப்
    பேரின்ப மாகவந்த பெருக்கே பேசா
வீறனைத்தும் இந்நெறிக்கே என்ன என்னை
    மேவென்ற வரத்தேபாழ் வெய்ய மாயைக்