அலுவலாளர்களும் அமைந்து தத்தம் நிலைமைக்கேற்ற மெய்ம்மை வழுவாது ஏனையாரோடு பிணக்கமற்று இணக்கமுற்று இயல்வதூஉம் இதற்கு ஒப்பாகும்.
சமயங்கள் வருமாறு : புறப்புறச் சமயம்: 1. உலகாயதம், (பௌத்தத்துள்) 2. உமாத்தியமிகம், 3. யோகாசாரன், 4. சௌத்திராந்திகள், 5. வைபாடிகன், 6. ஆருகதன். மேற்கொண்டுள்ளது. புறச் சமயம்: 1. தருக்கம், 2. மீமாஞ்சை, 3. ஏகான்மவாதம், 4. சாங்கியம், 5. யோகம் 6. பாஞ்சராத்திரம் என்ப. அகப்புறச் சமயம்: 1. பாசுபதம், 2. மாவிரதம், 3. காபாலம், 4. வாமம், 5. வைரவம், 6. ஐக்கியவாத சைவம் என்பன.
இம் மூன்றனையும் ஒருங்கு சேர்த்து முக்கூற்றுப் புறச்சமயம் என்ப. இச் சமயங்களை யெல்லாம் சித்தாந்த சைவம் படிமுறையாகக் கொண்டு தன்னகத்தடக்கிப் புறக்கணியாது ஏற்று நிற்குந் தன்மையினை வருமாறுணர்க:
"அறுவகைச் சமயத்தோர்க்கும்" (பக்கம் 5) "விரிவிலா அறிவினார்கள்" (பக்கம் 10) "முதலொன்றாம்" (பக்கம் 10) என வருவனவற்றாற் காண்க.
| "புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும் |
| புகன்மிருதி வழியுழன்றும் புகலுமாச் சிரம |
| அறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும் |
| அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்தும் |
| சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத |
| சிரப்பொருளை மிகத்தெளிந்துஞ் சென்றாற் சைவத் |
| திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகஞ் |
| செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்." |
| - சிவஞானசித்தியார். 8 - 2, 1 |
| "ஓதுசம யங்கள்பொருள் உணரும் நூல்கள் |
| ஒன்றோடொன் றொவ்வாமல் உளபலவும் இவற்றுள் |
| யாதுசம யம்பொருள்நூல் யாதிங் கென்னின் |
| இதுவாகும் அதுவல்ல தெனும்பிணக்க தின்றி |
| நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண |
| நின்றதியா தொருசமயம் அதுசமயம் பொருள்நூல் |
| ஆதலினால் இவையெல்லாம் அருமறையா கமத்தே |
| அடங்கியிடும் அவையிரண்டும் அரனடிக்கீ ழடங்கும்." |
| - சிவஞானசித்தயார் 8. 2 - 3 |