சித்தாந்த சைவர் எனப்படும் செம்பொருட்டுணிவினர் சமயங் கடந்த தத்துவங் கடந்த நிலைமைசேர் தலைமையர். இவ்வுண்மை "அறுவகைச் சமயத்தோர்க்கும்" எனத் தொடங்கும் சிவஞானசித்தியாராகிய தனித்தமிழாகமத்தின் (பக்கம் 5) திருப்பாட்டான் உணர்க.
மேலும் வரும் திருப்பாட்டும் இவ்வுண்மையினை ஓதுவது காண்க :
| "மொய்தரு பூத மாதி மோகினி யந்த மாகப் |
| பொய்தரு சமயம் எல்லாம் புக்குநின் றிடும்பு கன்று |
| மெய்தரு சைவ மாதி இருமூன்றும் வித்தை யாதி |
| எய்துதத் துவங்க ளேயும் ஒன்றுமின் றெம்மி றைக்கே." |
| - சிவஞானசித்தியார், 2. 4 - 1. |
மாதவச் சிவஞான முனிவரனா ரருளிய பேருரைக்கண் அப் பெருமானார் அருளியது வருமாறு :
"பாசுபதம், மாவிரதம், காபாலம் ஆகிய முக்கொள்கையாளரும் முறையே" சங்கிராந்த சமவாதி, உற்பத்தி சமவாதி, ஆவேச சமவாதிகளெனவும் அழைக்கப்படுவர். இம் மதங்களைச் செய்தார் மாயை, வித்தை, காலமென்னும் மெய்களில் வைகும் உருத்திரர் மூவர். "வாமம்" இந்நூல் செய்தார் சித்த புருடர் சத்திதத்துவத்தில் வைகும் ஓரான்மா, என்ப.
(6)
இயல்பென்றுந் திரியாமல் இயம மாதி | எண்குணமுங் காட்டியன்பால் இன்ப மாகிப் | பயனருளப் பொருள்கள்பரி வார மாகிப் | பண்புறவுஞ் சௌபான பட்சங் காட்டி | மயலறுமந் திரஞ்சிட்சை சோதி டாதி | மற்றங்க நூல்வணங்க மௌன மோலி | அயர்வறச்சென் னியில்வைத்து ராசாங் கத்தில் | அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ. |
(பொ - ள்) "இயல்பென்னும் . . . காட்டி" - எக்காலத்தும் தன்னியற்கை மாறுபடாமல், இயமம் முதலாகச் சொல்லப்படும் எட்டுக் குணங்களையும் விளங்க வுணர்த்தி, மாறிலாத அன்பினால் இன்ப வண்ணமாய், பெரும்பயன் அளித்தருளப் பொருள்களும் பரிவாரமாகிய சூழ்வுகளுமாகி, மேலாங் குணத்தைப் பொருந்தவும், படிமுறை வழியினை உணர்த்தி,
"மயலறு . . . அந்தோ" - மயக்கம் அற்று ஒழிவதற்கு வாயிலாகிய மந்திர முதலாகக் கோள்நூல் ஈறாகச் சொல்லப்படும் அறுவகையாம் உறுப்பு நூல்களும் தலை வணங்குமாறு வாய்வாளாமை யெனப்படும் மௌனத் திருமுடியினைத் தலைமேற் சூட்டி அரசோச்சு முறையில்