மோகஇருள் மாயைவினை உயிர்கட் கெல்லாம் | மொய்த்ததென்கொல் உபகார முயற்சி யாகப் | பாகமிக அருளஒரு சத்தி வந்து | பதித்ததென்கொல் நானெனுமப்பான்மை என்கொல். |
"ஆகியசற் . . . நிற்ப" - உள்ளாக்க வழக் கெனப்படும் சற்காரியவாத உய்த்துணர்வுக்கேற்ற இயல்பாகவே பாசங்களினீங்குதலுடையனாய், நடுநிலை நீங்காநயனுடையனாய், முடிவிலாற்றலுடைய அவ்வாற்றலுடன் விட்டு நீங்கா வியத்தகு இயல்பினனாய், வரம்பிலின்ப வாய்மை வண்ணனாய், உயிருக்குயிராய் எஞ்ஞான்றும் ஓங்கி நிற்கு முதல்வன் ஒன்றாய் வேறாய் உடனாய் நின்றருளவும்.
"மோகவிருள் . . . என்கொல்" - மயக்கமாகிய பெருவேட்கையினை மிகுவிக்கும் ஆணவவல்லிருளும், (அதனையகற்றத் திருவருளால் காரியப்படுத்திக் கூட்டுவித்த) மாயையும், வினையும் ஆருயிர்கட்கெல்லாம் வந்தடைதற்குரிய காரணம் யாது? திருவருட்டுணையாய் நிகழும் நீங்கா உதவியே ஆருயிர்கட்கு முயற்சியாய் (அது வாயிலாகச்) செவ்வி எனப்படும் பரிபாகம் வருவித்துத் திருவருள் வீழ்ச்சியாகிய சத்தினிபாதமும் உறுவித்து ஆட்கொண்டருளுவதற்குரிய காரணமும் யாதாகும்?
(வி - ம்.) காரணமாயைக்கு அழிவின்மை போன்று காரிய மாயைக்கும் அழிவில்லையென்க. அதனால் இல்லது வாராது உள்ளது போகாது என்னும் வழக்கு வழங்குவதாயிற்று. இதனை உள்வழக்கெனவுங் கூறுப. சற்காரிய மென்பது மிதுவே. இறைவன் ஆருயிர்களுடன் தொன்று தொட்டே நீங்காதிருப்பவும் மலமாயை கன்மங்கள் எங்ஙனம் வந்து பொருந்திற்று? இறை, உயிர், சிறை ஆகிய முப்பொருளும் என்றும் பொன்றாத் தொன்றியற் பொருளே.. உயிர்கள் குற்ற இயல்பாகிய ஆணவமலச்சிறையுடன் பண்டே பிணிப்பட்டுப் புல்லிக்கிடந்தன. அதனை அகற்றவே மாயை வினைகளும் திருவருளால் இயைவிக்க இயைவவாயின. இவ்வுண்மைகள் வருமாறு :
| "நீடும் ஒளியும் நிறையிருளும் ஓரிடத்துக் |
| கூடல் அரிது கொடுவினையேன்-பாடிதன்முன் |
| ஒன்றவார் சோலை உயர்மருதச் சம்பந்தா |
| நின்றவா றெவ்வாறு நீ." |
| - வினா வெண்பா, 1. |
| "எழுமுடல் கரணம் ஆதி யிவைமலம் மலம்ம லத்தால் |
| கழுவுவன் என்று சொன்ன காரணம் என்னை யென்னின் |
| செழுநவை அறுவை சாணி உவர்செறி வித்த ழுக்கை |
| முழுவதங் கழிப்பன் மாயை கொடுமலம் ஒழிப்பன் முன்னோன்." |
| - சிவஞானசித்தியார், 2. 3 - 2. |
(14)