பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

278
பேதைமையினால் பிதற்றிக் கெட்டேன். இம் மன்றத்தின்கண் வீற்றிருந்து குனித்தருளும் கூத்தப்பெருமானார் விண்ணும் மண்ணும் ஒருங்கு ஏத்தும் ஒப்பில் முதல்வராவர் என உளமாரக்கூறி இன்புற்.று வழி பட்டனர். தம்வயமிழந்து இறைதன்வய முழந்து "வேதபரதத்வம்" என்னும் நூலும் இயற்றினர். நன்னெறிசார்ந்து இன்புற்றனர்.

(12)
 
காண்டல்பெறப் புறத்தினுள்ள படியே உள்ளுங்
    காட்சிமெய்ந்நூல் சொலும்பதியாங் கடவு ளேநீ
நீண்டநெடு மையுமகலக் குறுக்குங் காட்டா
    நிறைபரிபூ ரணஅறிவாய் நித்த மாகி
வேண்டுவிருப் பொடுவெறுப்புச் சமீபந் தூரம்
    விலகலணு குதல்முதலாம் விவகா ரங்கள்
பூண்டஅள வைகள்மனவாக் காதி யெல்லாம்
    பொருந்தாம லகம்புறமும் புணர்க்கை யாகி.
     "காண்டல் . . . கடவுளேநீ" - புறத்தே காணப்படும் உலகு, உடற் பொருள்களை உள்ளும் புறம்புமாய் நிறைந்து நீங்காது நின்று இயக்கியருளுந் தன்மைபோன்று உயிர்களுள்ளும். மாயையினுள்ளும் விரவிநின்று விடாது இயக்கியருளும் விழுமிய முழுமுதல்வன் நீயென்று மெய்ந் நூல்கள் புகலாநிற்கும்.

     "நீண்டநெடு . . . ஆகி" - (நீ) நீண்டநெடுமையும், அகலமும், குறுக்கும் காட்டுதற்கு இடமில்லாத முற்றும் நிறைந்த முழுதுணர் மூதறிவாய். அழிவில்லதாய். விருப்புவெறுப்பு இல்லாததாய், அண்மை சேய்மை, நீங்குதல் நெருங்குதல் முதலாய வாய்பாடுகள் இல்லதாய் அளவைகட்கு அப்பாற்பட்டதாய், மாற்றம் மனங்கழிய நின்ற மறைபொருளாய், எள்ளி லெண்ணெய் போன் றுள்ளும் புறம்புமாய் நிற்கும் புணர்புள்ளவனாகி.

     (வி - ம்.) மெய்ந்நூல் - திருமுறைகளும், மெய்கண்ட நூல்களுமென்ப. புணர்ப்பு: ஒன்றாய் வேறாய் உடனாய் நின்றியக்கி நிறையின்பம் ஊட்டும் நெடுநிலை. சிவன் எல்லாங் கடந்த நிலையன் என்னும் மெய்ம்மை வருமாறு:

"சிவன்அரு உருவும் அல்லன் சித்தினோ டசித்தும் அல்லன்
 பவமுதல் தொழில்கள் ஒன்றும் பண்ணிடு வானும் அல்லன்
 தவமுத லியோக போகந் தரிப்பவன் அல்லன் தானே
 இவைபெற இயைந்தும் ஒன்றும் இயைந்திடா இயல்பி னானே."
- சிவஞானசித்தியார், 1. 3 - 11
(13)
 
ஆகியசற் காரியவூ கத்துக் கேற்ற
    அமலமாய் நடுவாகி அனந்த சத்தி
யோகமுறும் ஆனந்த மயம தாகி
    உயிர்க்குயிரா யெந்நாளும் ஓங்கா நிற்ப