பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

290
ஆராய்ந்துணர்ந்து அதன்படியொழுகி, உன்திருவடியினைப் பிரியா வண்ணம் அணைந்து, உயர்வற உயர்ந்த வியத்தகு திருவடி யின்பத்தினை நுகர்ந்துகொண்டிருக்கும் மெய்யன்பர்கள் அனைவரும் (அடியேனை நோக்கி) ஐயா! என்று கழிவிரக்கம் கொள்ளும்படியாக.

     "தீயகொலைச் . . . செய்வேன்" - வேதவேள்வியெனப் புனைந் துரைத்துக் கொலையும் புலையும், குடியும், கூடா ஒழுக்கமும் பூண்டு போலிக் கோலங் கொண்டுழலும் புல்லிய சமையத்துஞ் செல்ல நாட்டங்கொள்ளவும் (அதனைக்கண்டு நடுநடுங்கி) ஆகாதென அமைவு கூறி அடங்குவேன்.

     "வாழ்வான் . . . நேரே" - உயிர் வாழ்தற் பொருட்டு உடலோம்பக் காயும், இலையும், சருகும் முதலிய பொருள்களை உண்ணக் காடும் மலையும் கடலும் எங்கே என ஓடியுழன்று நீங்காக்கவலை கொள்வேன்; நிலவோன் பகலோன் என்று சொல்லப்படும் திங்களையும் ஞாயிற்றையும் முன்னிலையாகத் தங்கவைத்து நிலத்தே வாயில்லாக் குடம் போன்று கிடந்துருள்வேன்.

     (வி - ம்.) புலாலுண்ணலை யொதுக்காத புத்தமும், கடவுளுண்மை யுணராது "கொல்லாமை மறைந்துறைந்து" கொலைபுரிய அஞ்சாத சமணமும், சிற்றுயிர்களையும், பிறப்பு இறப்பு எடுத்து ஓவாதுழலும் உயிர்களையும், உயிரும் அறிவுமில்லாத பூதங்களையும் தங்கள் பெருந்தெய்வமாகக்கொண்டு வேள்விப்பெயரால் கொலை புலை புரிந்து குடித்துக் களிக்கும் வைதிக சமயமும் கொலைச்சமயம் என்க. இக்குற்றங்கள் ஏதுமில்லாத நிலைச்சமயம் தொன்மைச் செந்தமிழ்ச் சிவநெறியாகிய சைவம் ஒன்றேயாம். சமயங்கள் நாலாறாகப் பகுக்கப்படும். இவற்றைக்கடந்து நிற்பது சைவச் செந்நெறி. இப் பகுப்பினர் நால்வரும் முறையே இறையுண்மை இல்லார் இறையுயிரே என்பார், இறைகோலம் பேற்றியைபில் லார் எனவழங்கப் பெறுவர்.

(25)
 
நேரேதான் இரவுபகல் கோடா வண்ணம்
    நித்தம்வர வுங்களைஇந் நிலைக்கே வைத்தார்
ஆரேயங் கவர்பெருமை என்னே என்பேன்
    அடிக்கின்ற காற்றேநீ யாரா லேதான்
பேராதே சுழல்கின்றாய் என்பேன் வந்து
    பெய்கின்ற முகில்காள்எம் பெருமான் நும்போல்
தாராள மாக்கருணை பொழியச் செய்யுஞ்
    சாதகமென் னேகருதிச் சாற்று மென்பேன்.
     (பொ - ள்) "நேரேதான் . . . என்பேன்" - பகலோனும் நிலவோனுமாகிய ஞாயிறு திங்கள் எனப்படும் கோள்களிரண்டனையும் நோக்கிச் சிறிதும் மாறுபாடில்லாமல் நாடொறும் முறையாகத் தோன்றவும்,