பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

292
     "சுருதி . . . என்பேன்" - (கேட்டுக் கேட்டு வழி வழியாகக் கூட்ட முற்று ஓதப்பட்டுவரும்) சுருதியே! நீ உலகில் மக்கள் அனைவருக்கும் அவரவர் இயல்புக் கொத்தவாறு பொருளுண்மை போதிக்கின்றாய், எல்லாரும் எளிதின் உணருமாறு அப் பொருளுண்மையினை உணர்த்தா யென்பேன்.

     (வி - ம்.) சிவபெருமானின் பாதமிரண்டும் வினவிற் பாதாளம் எழினுக்கும் அப்பால் என்ப. அவர் போதார் புனைமுடியும் வினவிற் சொல்லிறந்த தொன்மைத்து என்ப.

(27)
 
உரையிறந்து பெருமை பெற்றுத் திரைக்கை நீட்டி
    ஒலிக்கின்ற கடலேஇவ் வுலகஞ் சூழக்
கரையுமின்றி யுன்னைவைத்தார் யாரே என்பேன்
    கானகத்திற் பைங்கிளிகாள் கமல மேவும்
வரிசிறைவண் டினங்காள்ஓ திமங்காள் தூது
    மார்க்கமன்றோ நீங்களிது வரையி லேயும்
பெரியபரி பூரணமாம் பொருளைக் கண்டு
    பேசியதுண் டோவொருகாற் பேசு மென்பேன்.
     (பொ - ள்) "உரையிறந்து . . . என்பேன்" - சொல்லவெண்ணாத பெருமை பெற்று அலைக்கைகளை நீட்டி ஓவாது ஒலித்துக் கொண்டிருக்கும் கரையில்லாத கருங்கடலே, இவ்வுலகைச் சூழ்ந்து கரையுமின்றி அடங்கி நிற்குமாறு உன்னை அமைத்துவைத்தவர் யாரோ? கூறுமின் என்பேன்.

     "கானகத்திற் . . . என்பேன்" - அடர்ந்த காட்டகத்து வாழும் பசிய கிளிகளே! தாமரைமலரில் பொருந்திய அன்னங்களே! அழகிய சிறைகளையுடைய வண்டுக் கூட்டங்களே! நீங்கள் இன்னலகற்றும் பொருட்டுத் தூது செல்லும் செலவினை மேற்கொண்டு ஒழுகும் இயல்புடையவர்களன்றோ, எங்கும் நீக்கமற நிறைந்து எவற்றையும் தன் இன்னருள் நோக்கத்தால் இயக்கிவரும் அப் பெரிய மெய்ப் பொருளைக் கண்டு களிகொண்டு வெளிநின்று பேசியதுண்டோ! ஒரு முறை அடியேங்கட்கு உரையும் என்பேன்.

     (வி - ம்.) தூது விடற்குத் தகுதி வாய்ந்த பொருள்கள் பத்து. அவை வருமாறு:

"இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை
 பயம்பெறுமே கம்பூவை பாங்கி-நயந்தகுயில்
 பேதைநெஞ்சம் தென்றல் பிரமரமீ ரைந்துமே
 தூதுரைத்து வாங்குந் தொடை." -இரத்தினச்சுருக்கம்.
(28)