மெய்ம்மையினை உற்றுணரின் அவர்தம் திருப்பெயர் திருத்தொண்டத் தொகைக்கண் சேர்க்கப்பெறாமைக்குரிய மெய்ம்மை புலனாகும். அஃதாவது தோன்றும் அடிமை மகன்மையொடு தோழமையும், தோன்றா காதன்மைதொகைக்கண் என்பதற்கியைய அடிமைத் தொண்டராகிய நாவரசரும் மகன்மைத்தொண்டராகிய ஞானசம்பந்தரும், தோழமைத் தொண்டராகிய நம்பியாரூரரும் திருத்தொண்டத் தொகைக்கண் இடம் பெறும் இயல்பினரேயாவர். மணிவாசகர் காதன்மைத் தொண்டராதலால் இடம் பெறாப்பேற்றினராவர். இவ்வுண்மை மார்கழித் திருவெம்பாவைத் திருவிழாவின்கண் ஒன்பது நாளும் மணிவாசகர் திருவுலாக் கொண்டு பத்தாம் நாள் அம்மை அம்பலவாணர் செம்மையுறத் திருவுலாக் கொண்டருள்வதால் விளங்கும்.
(32)
ஓதரிய சுகர்போல ஏன்ஏன் என்ன | ஒருவரிலை யோஎனவும் உரைப்பேன் தானே | பேதம்அபே தங்கெடவும் ஒருபே சாமை | பிறவாதோ ஆலடியிற் பெரிய மோன | நாதனொரு தரமுலகம் பார்க்க இச்சை | நண்ணாணோ என்றென்றே நானா வாகிக் | காதல்மிகு மணியிழையா ரெனவா டுற்றேன் | கருத்தறிந்து புரப்பதுன்மேற் கடன்முக் காலும். |
(பொ - ள்) "ஓதரிய . . . பிறவாதோ" சொல்லுதற்கரிய பண்டை நற்றவத்தால் தோன்றிய சுகர்பொருட்டு நேர்ந்த ஏன், ஏன் என்னும் எதிரொலிபோன்று சொல்லுவார் ஒருவர் இல்லையோ என்றும் கூறுவேன்: தானாகவே, வேற்றுமையெனவும் ஒற்றுமை எனவும் எண்ணும் எண்ணம் அகல ஒப்பில்லாத பேசாமை என்னும் பெருநிலை உண்டாகாதோ?
"ஆலடியிற் . . . நண்ணானோ" - (மரத்தினுட் சிறந்து பிள்ளைகள் தள்ளரிய தங்குடும்பத்தைத் தவிராது யாண்டும் தாங்கிவருதல், வேண்டுமெனும் சால்புடைத்தனிக்குறிப்பைத் தக்கவாறுணர்த்துவது போன்று விழுதூன்றி அடிமரத்தைத் தாங்குந்தன்மை வாய்ந்த சீரிய) ஆலமரத்தடியில் வீற்றிருந்தருளும் பெருமை மிக்க வாய் பேசாத முதல்வனாகிய ஆலமர்செல்வன் முன்போன்று மீண்டும் ஒருமுறை இவ்வுலகத்தைக் கடைக்கணித்தருளித் திருநோக்கங் கொள்ளுமாறு விழைவு கொண்டருளானோ?
"என்றென்றே . . . முக்காலும்" - மேலோதியவற்றையே மீட்டும் மீட்டும் சொல்லிச் சொல்லிப் பலவேறுவகையாகப் பிரிந்த கணவனைப் பேரன்பால் உன்னி உன்னிக் காதன் மிகும் அழகிய சிறந்த அணி அணிந்துள்ள மகளிரைப் போலச் செய்வதறியாது நனிமிகவாடுவேன், அடிமையின் கருத்தறிந்து எளியேனைத் காத்தருளுவது இறைவனே