பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

295
"தொழுதணைவுற் றாண்டவர சன்புருகத்
    தொண்டர்குழாத் திடையே சென்று
 பழுதில்பெருங் காதலுடன் அடிபணியப்
    பணிந்தவர்தங் கரங்கள் பற்றி
 எழுதரிய மலர்க்கையால் எடுத்திறைஞ்சி
    விடையின்மேல் வருவார் தம்மை
 அழுதழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே
    எனவவரும் அடியேன் என்றார்."
- 12. அப்பர் - 18.
(30)
 
தேவர்தொழும் வாதவூர்த் தேவே என்பேன்
    திருமூலத் தேவேஇச் சகத்தோர் முத்திக்
காவலுறச் சிவவென்வாக் குடனே வந்த
    அரசேசும் மாலிருந்துன் அருளைச் சாரப்
பூவுலகில் வளரருணை கிரியே மற்றைப்
    புண்ணியர்கா ளோவென்பேன் புரையொன் றில்லா
ஓவியம்போல் அசைவறவுந் தானே நிற்பேன்
    ஓதரிய துயர்கெடவே யுரைக்கு முன்னே.
     (பொ - ள்) "தேவர்தொழும் . . . தேவே"-(முழுத்தழல் மேனித்தவளப் பொடியன் கனகக்குன்றத் தொழிற்பெருஞ்சோதியெங்கள் பிரானுக்குக் காதற்படி முறையான் ஒப்பெனப்படும்) தேவர்களால் தொழப்படும் திருவாதவூர்த் தேவாகிய மணிவாசகரே! என்பேன்; (தனித்தமிழ்ச் சிவாகமமாகிய திருமந்திரமாலை யெனப்படும்) திருமாமுறையினைத் திருவருளால் தந்தருளிய திருமூலதேவரே! என்பேன்.

     "இச்சகத்தோர் . . . முன்னே" - இந் நிலவுலகத்தோர் வீடு பேற்றினுக்குப் பெருவேட்கையுறுமாறு சிவவாக்கியர் என்னும் திருப்பெயருடன் தோன்றிய சிவவாக்கியரே (சும்மாவிருவெனச் செவியறிவுறுத்தருளியபடி) இவ்வுலகின்கண் (சிவனைமறவாது செயலற்றிருத்தலே சும்மாவிருத்தலாம்) அங்ஙனம் சும்மா இருந்து உன்திருவருளைச் சார இவ்வுலகின்கண் கந்தரனுபூதி யென்னும் கடவுள் நூலை வெளிப்படுத்தருளிய அருணகிரி நாதரே! வேறுள்ள மெய்யடியார்களாகிய சிவபுண்ணியப்பெரும் பேறுடையரே! என்றென்று வாழ்த்தி அழைப்பேன். உயிரோவியம் போன்று அசைவற நிற்பேன். அடியேன் பிறவித்துன்பமெல்லாம் கெட்டொழியுமாறு இத் திருப்பெயர்கள் அனைத்தையும் ஓவாது ஓதிக்கொண்டிருப்பேன்.

     (வி - ம்.) மணிவாசகப் பெருமானைத் "தேவர்தொழுந்தேவே" யென்று சிவனைத் தொழுதழைக்குமாறு காதலுடன் அழைத்த