முதல்வனாகி அருளுடன் ஆவியாகிய அருளும் கலந்திடுவதே முதல் என்பர் (ஐக்கியவாதிகள்). இவ்வுண்மை வருமாறு காண்க:
| "அரிதேர்ந் துணராப் . . . |
| அறிவாம் உயிரிற் பிறியா தேயும் |
| ஈட்டும் இருபயன் ஊட்டிடும் நியதி |
| ஒருபோ திருபயன் நுகர்வுற மருவுதல் |
| இன்மை யாதல் முன்னிய காலைச் |
| சத்தினி பாதம் உற்றிறை யருளால் |
| உருவுகொ டுலகு தெரிவு மருவி |
| மாசுறு தூசு தேசுற விளக்கும் |
| தன்மையின் உணர்த்தும் புன்மைகள் நீங்கி |
| நீரும் நீரும் சேருந் தகைமையின் |
| அறிவினோ டறிவு செறிவுறப் பொருந்தி |
| ஒன்றாம் என்பதை உலகோர் |
| நன்றா முத்தி எனநவிற் றினரே." |
| -சங்கற்ப நிராகரணம், ஐக்கிய - 5. |
12. "பின்னு முன்னுங் கெட்ட சூனியமதென்பர் சில பேர்." ஆருயிர்ப்பாழ், அருட்பாழ், சிவப்பாழ் என்ற மூன்று பாழையுங் கடந்து நின்ற பாழே முதலென்பர். இவ்வுண்மை வருமாறு காண்க:
| "சும்மா யிருக்கச் சுகமுதய மாகியிடு |
| நம்மாணை நம்மாணை நம்மாணை - அம்மாகேன் |
| முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய் |
| அப்பாலும் பாழென் றறி." |
| - மறைமுடிவிளக்கம். |
இங்ஙனம் பலவேறு கொள்கையினரும் ஒன்றோடொன்று ஒவ்வாமல் முரண்பட்டு நிரம்பாக்கொள்கைகளைத் தத்தம் மனம்போனவாறே கூறுகின்றனர். அதனால் அவற்றைக் கேட்டு மனம் ஒருவழிப்படாது இரசம்போன்று அலைகின்றது. மேலும் இக் கோட்பாடுகள் அனைத்தும் சுட்டறிவாகிய பாச ஞானமும், சிற்றறிவாகிய பசு ஞானமுமே யாதலால் ஒருமை நிலையாகிய நிட்டை கைகூடாதென்பார் 'பரமசுக நிட்டை. பெறுமோ' என்றோதினர். இவ்வுண்மை வருமாறு காண்க:
| "பாசமா ஞானத் தாலும் படர்பசு ஞானத் தாலும் |
| ஈசனை உணர வொண்ணா திறையருள் ஞானம் நண்ணித் |
| தேசுறும் அதனால் முன்னைச் சிற்றறி வொழிந்து சேர்ந்து |
| நேசமோ டுயர்ப ரத்து நிற்பது ஞான நிட்டை." |
| - சிவப்பிரகாசம், 84. |
(6)