பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

29

முதல்வனுடன் சமமாய் நிற்றலே முதலென்பர் சிவசமவாதியர். பரமபதமென்கிற வீட்டில், நீளாதேவி, பூதேவி சமேதராய்த் திருமாமணி மண்டபத்தில் சங்குசக்கரதாரியாய், நீலமேனியராய் நித்திய சூரிகளால் சேவயமானவராய் எழுந்தருளியிருப்பவரே முதலென்னும் பாஞ்சராத்திரியரு மிவருள் அடங்குவர். இவ்வுண்மை வருமாறு காண்க:

"பாசமும் பசுவும் . . .
 முன்னோன் தனது முதிர்ஒளி ஞானம்
 அறியாப் பச்சைச் சிறுபுழுக் கவர்ந்த
 வண்டென உயிரைக் கொண்டிடும் உயிர்அது
 தன்னை நோக்கித் தான் அது வாகி
 ஐவகைத் தொழிலும் மெய்வகை உணர்வும்
 பிரியா வாறு பெற்றுத்
 திரியாப் பெரியோர் திரட்சிசேர்ந் திடுமே."
- சங்கற்ப நிராகரணம்-சிவசமவாதி.
     9. "அருவென்பர் சில பேர்" - உருவமனைத்தும் விவர்த்தமே. எனவும், நிட்கவ, நிசானந்த, நின்மல, நிஸ்ப்பிரகாச, நிராமய, நிஸ்தரங்கமாய், ஞெப்தி மாத்திரமான பிரமமே முதலென்பர். இவ்வுண்மை வருமாறு காண்க:

"அறிவாய் அகில காரணமாய் அநந்தா நந்தமாய் அருவாய்ச்
 செறிவாய் எங்கும் நித்தமாய்த் திகழ்ந்த சத்தாய்ச் சுத்தமாய்க்
 குறிதான் குணங்க ளொன்றின்றிக் கூறும் வேதம் தனக்களவாய்ப்
 பிறியா அனுபூ திகந்தனக்காய் நின்ற தந்தப் பிரமந்தான்."
- சிவஞானசித்தியார், பரபக்கம் - 221.
     10. "பேதமற உயிர்கெட்ட நிலையமென்றிடுவர் சிலர்" - பெரும் பொருள்தானே பேருலகமுமாய், ஆருயிருமாய் நின்று காரியப்படுகிறவிடத்து, ஆன்மா கன்மத்தைச் செய்து, மெய்யுணர்வு கைவந்தவாறே பெரும்பொருளாகிய மெய்ப்பொருளோடுங் கூடி, ஆருயிர் அழிந்துபோய் நிற்பது முதலென்பர் (பாற்கரியர்). இவ்வுண்மை வருமாறு காண்க:

"சித்தே உலகாய்ப் பரிணமித்துச் சீவ னாகித் திகழ்ந்தமையால்
 சத்தே யெல்லாம் முத்தியினைச் சாரக் கண்ட ஞானங்கள்
 வைத்தே மொழியும் மாமறைகள் சொன்ன மரபே வந்தக்கால்
 ஒத்தே கெட்டுப் பிரமத்தோ டொன்றாய்ப் போமென் றுரைத்தனனே."
- சிவஞானசித்தியார், பரபக்கம் - 254.
     11. "பேசிலருளென்பர் சிலர்" - அறிவுவண்ணமான, அருள் வடிவமாயிருந்த ஆவியானது வினையினாலும், மாயையினாலும் மறைக்கப்பட்டு, அவ்விரண்டும் மெய்க்குரவன் எழுந்தருளிவந்து ஆட்கொண்டருளிய தண்ணளியால் நீங்கியவழி நீரும் நீரும் சேருந் தகைமையில்