பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

313
மெய்யாம் நாதங்கடந்த பரம்பொருளே! நாரணன் முதலாச் சொல்லப்படும் நின்திருவாணை பெற்றுத் தேவர்களாய்த் தொழில் புரியும் சிற்றுயிர்களைப் பரிவாரங்களாகிய சுற்றமாகவும், ஏனைப் பத்தி மிகுந்த நிலவுலகத்து மெய்யடியார்களைத் திருவடியினைத் தழுவும் தன்மையுடைய மக்களாகவுங் கொண்டு அவரவர்கள் புரியும் திருத்தொண்டுகளை ஏற்றுக் கொண்டருளும் நனிமிகு கனமுடைய இயற்கைப்பேரொளிப் பெருமலையே!

     நீதம் - பாக்கியம். 'சுற்றமும்' - உம்மை - இசைநிறை.

(7)
 
குன்றாத மூவுருவாய் அருவாய் ஞானக்
    கொழுந்தாகி அறுசமயக் கூத்து மாடி
நின்றாயே மாயைஎனுந் திரையை நீக்கி
    நின்னையா ரறியவல்லார் நினைப்போர் நெஞ்சம்
மன்றாக இன்பக்கூத் தாட வல்ல
    மணியேஎன் கண்ணேமா மருந்தே நால்வர்க்
கன்றாலின் கீழிருந்து மோன ஞானம்
    அமைத்தசின்முத் திரைக்கடலே அமர ரேறே.
     (பொ - ள்) "குன்றாத . . . வல்லார்" - எவ்வகைக் குறைபாடு மில்லாத முத்தொழில்புரிவோர் தம்மை யியக்கிப் புரிவிக்கும் தன்மையில் மூவுருவமாகியும், (இன்னதன்மையனென எவரானும் கூறவொண்ணாத இன்ப வடிவினன் சிவன். எனினும் அப் பொருளே தரும் சொல்லாக வழங்கும்) அருவாய், மெய்யுணர்வுக்கொழுந்தாகி, அகச்சமயம் ஆறினுக்கும் அவ்லவர் பொருளாய் நின்று திருக்கூத்தினை யாடியருளியவனே! மாயாகாரியப் பொருள்களாகிய அரிய திரையினை நின் திருவருட்டுணையின்றித் தாமாக நீக்கி நின் மெய்வடிவினை உணரவல்லார் யாவர்? (ஒருவரும் இலர் என்பதாம்.)

     "நினைப்போர் . . . அமரரேறே" - உள்ளன்புடன் நின்னை ஓவாது நினைப்போர் தூயநெஞ்சமே தில்லைத் திருச்சிற்றம்பலமெனப்படும் பொன்னம்பலமாக இன்பக் கூத்தாடவல்ல மாணிக்க மணியே! அடியேனின் கண்ணே! அழியாப் பேரினப் பெருமருந்தே! அந்நாளில் நற்றவத்தோர் நால்வர்க்கும் பேசாப்பேருணர்வு எனப்படும் மோன ஞானமமைத்த அறிவடையாளத்திருக்கையுடைய பேரின்பப் பெருங்கடலே! அமரர்கள் தலைவனே!

     (வி - ம்.) "மாயத்திரை" யென்பது மாயாகாரியப் பொருள்கள் அக்காரணமாயை அத் திரையினை நீக்கி உண்மையுணர வொட்டாது அப் பொருள்களிலேயே பெருவேட்கை கொள்ளுமாறு அழுத்தும். உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுப் பொருள்களை ஒருவர் காட்டுவராயின் அப்பொழுது அதனால் துன்பம் வரும் என்னும் எண்ணமாறி இன்பமெனப் பிழைபடக் கொண்டு அதன்கண் வேட்கையுற்று அல்லற்படுவது இதற்கொப்பாகும்.