வெளிப்பட்டுப் புறப்படும் (மனம்) வன்மைத்தன்மையால் இரும்போ, கல்லோ, பட்டமரமோ என்று சொல்லும்படியான கொடிய இளகுதலில்லாத நெஞ்சினை,
"கனன்மே . . . . . . விளங்கும்" - கொழுந்து விட்டெரியும் தழல் மேலிட்ட மெழுகையொத்து (திருவருள்) உருக்கும் பேரின்பப் பெருவெள்ளமாகிக் கரும்பின் சாறோ, கற்கண்டோ, சீனியோ, வெல்லமோ, இனிய முக்கனிகளோ, அமிழ்தமோ என்று சொல்லும்படியான மிக்க சுவையினைத் தரும். அதன்கண் கருத்தழுந்திச் செவ்வி எய்தி வேறொன்று மெண்ணாதார் அச் சுவையினை உணர்ந்து நுகர்ந்து இன்புறுவர். (இன்ன தன்மைத்தென ஒருவராலும் சொல்லவொண்ணாத) இவ்வியல்பினைச் செவ்விவாய்க்கப் பெறாத அரும்பின் கண் மணம் போன்றும் கன்னியறியாத காமச்சுவை போன்றும் திருவருள் உணர்வு கைவரப் பெறாதார் அறிந்து இன்புறார். (திருவடியின்பினைப் பக்குவர் அறிவர்; அபக்குவர் அறியார்.)
(8)
தானேயும் இவ்வுலகம் ஒருமுதலு மாகத் | தன்மையினாற் படைத்தளிக்குந் தலைமையது வான | கோனாக வொருமுதலிங் குண்டெனவும் யூகங் | கூட்டியதுஞ் சகமுடிவிற் குலவுறுமெய்ஞ் ஞான | வானாக அம்முதலே நிற்குநிலை நம்மால் | மதிப்பரிதாம் எனமோனம் வைத்ததும்உன் மனமே | ஆனாலும் மனஞ்சடமென் றழுங்காதே யுண்மை | அறிவித்த இடங்குருவாம் அருளிலதொன் றிலையே. |
(பொ - ள்) "தானேயு" . . . "கூட்டியதும்" - (தோற்ற நிலையிறுதியென்னும் மூவினைமையினை உடைய) இவ்வுலகம் தானாகவே அன்பறிவாற்றல்களையுடையதாய்க் காணப்படும் ஒரு முழுமுதலாகாத தன்மையினால் இதனைத் திருக்குறிப்பளவானே படைத்துக் காக்குந் தன்மைத் தலைமையதான முதல்வனாய் ஒருவன் இங்கு உண்டென்று உய்த்துணரும்படி கூட்டியதும்,
"சகமுடிவில் . . . . . . ஒன்றிலையே" - உலக முடிவில் விளங்கா நின்ற மெய்யுணர்வுப் பெருவெளியாகிய அம்முழுமுதல் நிற்குநிலை நம்மால் அளவிட்டுக் கூறமுடியாததாம் என்று வாய்வாளா நிலைமையெனப்படும் மோனமாயிருத்தல் வேண்டுமென வைத்ததும் உன் மனமேயாம். ஆனாலும் அம் மனத்தை அறிவில்லாத சடமென்று வருத்தம் எய்தாதே; மெய்யுணர்வுக்குரவனாய் வந்து அறிவித்தருளுதற்கு இடமாய் நின்ற மனமும் அறிவுள்ளது போன்றாகும். எனவே, திருவருளின் இயக்கத் திருமுன் அருட்செறிவில்லாத பொருள்கள் ஒன்றுமில்லை.
(வி - ம்.) மனத்தின் மேலேற்றிய தவ்வளவும் புத்தியின் மேலதாம், அது புத்திக்காட்சியினை மானதக்காட்சி யென்றுரைப்பதனோ டொக்கும். அறிவில்லாத மாயாகாரியமாகிய மெய்களெனப்படும் தத்துவக் கூட்டங்களின் மாட்சி அறிவுநிகழ்ச்சிகள் காண்டற்கியைபு