பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

324
போன்றே அடியேனும் இருந்தேன். நீ ஆசானாக எழுந்தருளி வந்து அம் மூன்றனையும் நின்னவாம் உண்மையினை உணர்த்தியருளினை; அப்பொழுதே அம்மூன்றனையும் நின் திருவடிக்கண்ணே ஒப்புவித்தேன், இன்னமும் அடியேனை இப்பிறவி இடருள் தங்கவைத்திருப்பாயானால், ஏழையேன் ஆவி நீங்கி விடும்; பின்பு அடியேன் உய்வதெங்ஙனம்?

(2)
 
ஆவி யேயுனை யானறி வாய்நின்று
சேவி யேன்களச் சிந்தை திறைகொடேன்
பாவி யேனுளப் பான்மையைக் கண்டுநீ
கூவி யாளெனை யாட்கொண்ட கோலமே.
     (பொ - ள்) எளியேன் உயிரினுக்குயிராம் முதல்வனே! நின் திருவுருவம் வாலறிவு; யானும் நின்திருவருளால் அவ்வறிவாக நின்று நின்னைக் காணுதல் வேண்டும்; அங்ஙனங் கண்டு தொழுகின்றிலேன்; வஞ்சனை பொருந்திய எளியேன் உள்ளத்தை உன் திருவடிக்குத் திறையாக ஒப்புவித்தலும் செய்யேன்; திண்ணிய பாவத்தொழிலுடையனாகிய எளியேன் தன்மையினையும் கண்டருளிக் கடவுளே நீ அடியேனை அருளாலழைத்து ஆளாகக் கொண்டருளிய திருக்கோலமே!

    கூவிப்பணிகொள்ளும் உண்மை வருமாறு :

"கொள்ளுங் கில்லெனை அன்பரிற் கூய்ப்பணி
 கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்
 நள்ளும் கீழுளும் மேலுளும் யாவுளும்
 எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே."
- 8. திருச்சதகம் - 46.
(3)
 
கோல மின்றிக் குணமின்றி நின்னருள்
சீல மின்றிச் சிறியன் பிழைப்பனோ
ஆல முண்டும் அமிர்துரு வாய்வந்த
கால மெந்தை கதிநிலை காண்பதே.
     (பொ - ள்) எந்தையே! நீ பெருங்கடற் பெருநஞ்சினை உண்டும் துஞ்சாது அஃது அமிழ்தாக நின்று உலகுக்குணர்த்திய நின் பெருநிலையினைக் கண்டும், உன்னையடைதற்குரிய உள்ளம் போன்ற திருவைந்தெழுத்தும், உடல் போன்ற திருவெண்ணீறும், உடைபோன்ற சிவமணியும் திருக்கோலமாகக் கொள்ளாதும், நன்னெறி நாற்படியாம் சீலமுதலிய சிவவொழுக்கங்களை மேற்கொள்ளாதும் அடியேன் பிழைத்துய்வனோ? (உய்யேன் என்பதாம்.)

(4)