காணுங் கண்ணிற் கலந்தகண் ணேயுனைச் | சேணும் பாருந் திரிபவர் காண்பரோ | ஆணும் பெண்ணும் அதுவெனும் பான்மையும் | பூணுங் கோலம் பொருந்தியுள் நிற்கவே. |
(பொ - ள்) நோக்குதற்குரிய அறிவுக்கண்ணினுள் கலந்து அறிவித்தருள்கின்ற கண்மணியே! நீ (சிவஞான போதத்தின் கட் கூறப்படும் "அவன், அவள், அது" வெனப்படும்) ஆண், பெண், அதுவாகிய பொருள்களுடன் கலப்பினால் ஒன்றாய், அக் கோலங்களுடன் அகமுகமாய் உள்நின்றருள்கின்றனை. அத்தகையவுன்னைச் சேணாகிய விண்ணிடை நான்முகனும் பாராகிய நிலத்திடை மாலும் வெளிமுகத்தே தேடித்திரிந்து காணவல்லரோ? இவ்வுண்மை வருமாறு :
| "செங்க ணானும் பிரமனும் தம்முளே |
| எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலார் |
| இங்குற் றேனென் றிலிங்கத்தே தோன்றினான் |
| பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே." |
| - 5. 95 - 11. |
(5)
நிற்கும் நன்னிலை நிற்கப்பெற் றார்அருள் | வர்க்க மன்றி மனிதரன் றேஐயா | துர்க்கு ணக்கடற் சோங்கன்ன பாவியேற் | கெற்கு ணங்கண் டென்பெயர் சொல்வதே. |
(பொ - ள்) ஐயனே! நிற்றற்குரிய செம்பொருட்டுணிவாம் மெய்கண்ட நன்னெறிக்கண் நற்றவப் பேற்றால் நிற்கும் திருவருள் பெற்றார் அருளினத்தாரே யாவர். அவர் மனிதருள் உயர்ந்தாரே யானமையின் பண்டைய மனிதரல்லர். பொல்லாங்காகிய தீயகுணம் நிறையப்பட்ட அடியேன் பிறவிப்பெருங்கடலிற் கரையேறாது மரக்கலம்போற் பிறப்பு இறப்பிற்குட்பட்டு உழல்கின்றேன். அத்தகைய பாவியேனுக்கு, என்ன குணங் கண்டு, என்ன பெயரிட்டு அழைப்பது? (நன்னெறிப் படாதார் நாளுலந்து மாண்டு மண்ணாய்க் கழிவர்.) சோங்கு - மரக்கலம்.
இவ்வுண்மை வருமாறு :
| "ஆளா னார்க்கா ளானாரை யடைந்துய்யர் |
| மீளா வாட்செய்து மெய்ம்மையு ணிற்கிலார் |
| தோளா தசுரை யோதொழும் பர்செவி |
| வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே." |
| - 5. 90 - 3. |
(6)