பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

333
கரும்பைத் தந்துகண் ணீர்கம் பலையெலாம்
அரும்பச் செய்யென தன்னையொப் பாமனே.
     (பொ - ள்) காந்தக்கல் இரும்பைத் தன்வசம் இழுக்கின்ற இயற்கைத் தன்மை போன்று, அடியேனை மீண்டும் பிறப்பினை நோக்காவண்ணம் கருப்பஞ்சாற்றினும் இன்னிதாக அண்ணிக்கும் நின் திருவடியினைத் தந்தருளி விழிநீர் பொழிதல் மெய்ந்நடுங்கல் முதலாகிய அன்பு இன்ப அடையாளம் அடியேன் பால் உண்டாகச் செய்தருள்வாயாக. அடியேனுக்குத் (பால் நினைந்தூட்டுந்தாயினும் சாலப் பரிவுடைய) தாயொப்பாகிய தனிமுதற்றலைவனே.

     விழிநீர் பொழிதல் முதலிய குறிப்பு வருமாறு :

"ஞான போனகர் எதிர்தொழு தெழுந்தநற் றவத்து
 மானி யார்மனக் கருத்துமுற் றியதென மதித்தே
 பான லங்கண்கள் நீர்மல்கப் பவளவாய் குழறி
 யானும் என்பதி யும்செய்த தவமென்கொல் என்றார்."
- 12. சம்பந்தர் - 572.
     காந்த ஒப்பு வருமாறு :

"மன்னும் இருளை மதிதுரந்த வாறன்பின்
 மன்னும் அரனே மலந்துரந்து - தன்னின்
 வலித்திரும்பைக்1 காந்தம் வசஞ்செய்வான் செய்தல்
 சலிப்பில் விகாரியலன் தான்."
- சிவஞானபோதம், 11. 2 - 2
(24)
 
அன்னை யப்பனென் ஆவித் துணையெனுந்
தன்னை யொப்பற்ற சற்குரு என்பதென்
என்னைப் பூரண இன்ப வெளிக்குளே
துன்ன வைத்த சுடரெனத் தக்கதே.
     (பொ - ள்) (அடியேனை ஆட்கொண்டருளத் திருமேனி கொண்டு எழுந்தருளிவந்த) மெய்க்குரவனைத் தாய் தந்தை தாங்கும் உயிர்த்துணை, தனக்குத்தானே நிகராகிய தனிக்குரு என்று வேறுபடுத்திக்கூறுவதென்? யாண்டும் நிறைந்த பேரின்பப் பெருவெளிக்குள்ளே பிரிவறப் பொருந்தவைத்த பெருஞ்சுடராம் சிவபெருமானெனத் தெளிந்து செப்புதலே தக்கதாகும். இவ்வுண்மை வருமாறு :

"குருவே சிவமெனக் கூறினன் நந்தி
 குருவே சிவமென் பதுகுறித் தோரார்
 குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
 குருவே யுரையுணர் வற்றதோர் கோவே.
- 10. 1556
(25)
 
 1. 
இரும்பைக். சிவஞானசித்தியார், 11. 2 - 5.