பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

334
தக்க கேள்வியிற் சார்ந்தநற் பூமியின்
மிக்க தாக விளங்கும் முதலொன்றே
எக்க ணுந்தொழ யாவையும் பூத்துக்காய்த்
தொக்க நின்றுமொன் றாய்நிறை வானதே..
     (பொ - ள்) (மூதறிவு பயக்கும் மெய்கண்ட நூல்களைத் தக்க அருமறையோடு) கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை என்னும் நன்னெறி நான்முறையான் தூமாயை நிலத்தின்கண் அனைத்திற்கும் மேலாகத் திகழும் மெய்ப்பொருள் சிவமுதல் ஒன்றே. அச் சிவப்பழம் திருவருளால் கைகூடுதற்குக் கேட்டன் முதல் நான்கும் எத்திசையிலும் தொழும்படியாக எல்லாவற்றையும் சார்ந்து பூத்துக்காய்த்துப் பழுத்து நிற்கும். இங்ஙனம் உள்ளும் புறமுமாய் நிறைந்து நின்ற ஒப்பில் பெரும் பொருள் சிவன் ஒன்றேயாம்.

     (வி - ம்.) கேள்வி - அருமறை; உபதேசம். கேள்வி முதல் நான்கும் ஒன்றற்கொன்று ஏதுவும் பயனுமாய் நின்று திருவடிப் பேற்றினை நாளும் நல்கும். இவ்வுண்மை வருமாறு :

"கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை
    கிளத்தலென ஈரிரண்டாங் கிளக்கின் ஞானம்
 வீட்டையடைந் திடுவர்நிட்டை மேவினோர்கள்
    மேவாது தப்பினவர் மேலாய பதங்கட்
 கீட்டியபுண் ணியநாத ராகி யின்பம்
    இனிதுநுகர்ந் தரனருளால் இந்தப் பார்மேல்
 நாட்டியநற் குலத்தினில்வந் தவதரித்துக் குருவான்
    ஞானநிட்டை யடைந்தவர் நாதன் தாளே."
- சிவஞானசித்தியார், 8. 2 - 14.
(26)
 
ஆன மான சமயங்கள் ஆறுக்குந்1
தான மாய்நின்று தன்மயங் காட்டிய
ஞான பூரண நாதனை நாடியே
தீன னேன் இன்பந் தேக்கித் திளைப்பனே.
     (பொ - ள்) ஆறறிவு அருளால் பெற்ற மாந்தர் உய்யும்படிக் குண்டாகிய பெருமைமிக்க சமயங்களாறுக்கும் நிலைத்த புகலிடமாய் நின்று தன்மெய்ம்மை நிலையினைக் காட்டியருளிய இயற்கையும் முற்றும் பொருந்திய நிறையுணர்வுத் தலைவனை இடையறாது உள்கியே எளியேன் பேரின்பம் நிறைந்து வழிந்து நுகர்வேன்.

     சமய உண்மைகள் வருமாறு :

"நூறு சமயம் உளவா நுவலுங்கால்
 ஆறு சமயமவ் வாறுட் படுவன
 
 1. 
'அறுவகைச்,' சிவஞான சித்தியார், மங்கல வாழ்த்து.