பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

34

     வீடுபேற்றின்பம் நிலைபெற்ற பேரின்ப நுகர்வேயாம். இவ்வுண்மை வருமாறு காண்க:

"நின்றபர மானந்த நேரே யனுபவித்தங்
 கொன்றுபட வுள்ளுருகி யோவாம - லென்றும்
 மதுவுண்ட வண்டுபோன் மாளாச் சுகத்தைப்
 புதிதுண் டிருந்துவிடிப் போது."
- துகளறுபோதம்.
     ஞான வரம்பாகிய மோனத்தின் நிற்கு நிலை நீங்காது ஓங்குதற் பொருட்டுத் திருவடிப்பற்றுக்கோட்டினை வேண்டினர்; இவ்வுண்மை வருமாறுணர்க:

"பாசிபடு குட்டத்திற் கல்லினைவிட் டெறியப்
    படும்பொழுது நீங்கியது விடும்பொழுதிற் பரக்கும்
 ஆசுபடும் மலமாயை அருங்கன்மம் அனைத்தும்
    அரனடியை யுணரும்போ தகலும்பின் அணுகும்
 நேசமொடுந் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கும்
    நினைவுடையோர் நின்றிடுவர் நிலையதுவே யாகி
 ஆசையொடும் அங்கும்இங்கும் ஆகியல மருவோர்
    அரும்பாசம் அறுக்கும்வகை அருளின்வழி உரைப்பாம்."
- சிவஞானசித்தியார், 8. 4 - 4.
(8)
ஆழாழி கரையின்றி நிற்கவிலை யோகொடிய
    ஆலம்அமு தாகவிலையோ
  அக்கடலின் மீதுவட அனல்நிற்க வில்லையோ
    அந்தரத் தகிலகோடி
தாழாமல் நிலைநிற்க வில்லையோ மேருவுந்
    தனுவாக வளையவிலையோ
  சத்தமே கங்களும் வச்ரதர னாணையில்
    சஞ்சரித் திடவில்லையோ
வாழாது வாழவே இராமனடி யாற்சிலையும்
    மடமங்கை யாகவிலையோ
  மணிமந்த்ர மாதியால் வேண்டுசித் திகள்உலக
    மார்க்கத்தில் வைக்கவிலையோ
பாழான என்மனங் குவியஒரு தந்திரம்
    பண்ணுவ துனக்கருமையோ
  பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
    பரிபூர ணானந்தமே.