பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

33

நீராள மாயுருக வுள்ளன்பு தந்ததும்
    நின்னதருள் இன்னும்இன்னும்
  நின்னையே துணையென்ற என்னையே காக்கவொரு
    நினைவுசற் றுண்டாகிலோ
பாராதி யறியாத மோனமே யிடைவிடாப்
    பற்றாக நிற்கஅருள்வாய்
  பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
    பரிபூர ணானந்தமே.
     (பொ - ள்.) 'வாராத . . . . . . . சமரசமாகவே' - (ஊழின்மையால்) வாராதனவெலாம் ஒழிக; ஊழால் வருவனவெலாம் வந்து எய்துக; மனமானது திரிபின்றி நடுநிலை நீங்காது சான்றாக நின்று, பொருந்தும் படியான நிலை தந்ததும், மறை முடிவும் முறை முடிவும் ஆகியவற்றின் மரபுகள் பொதுமையாகவே.

     'பூராய . . . வீடென்னவே' - இன்றியமையாது அறியும்படி உய்த் துணரத்தக்க அறிவினை எழுப்பியருளியதும், (தோன்றிநின்று ஒடுங்குந் தன்மைத்தாய) இப் பொய்யுடலை என்றும் நிலையாக நிற்பதன்று எனத் துணிய, மெய்யுணர்வு வழியினை அளித்தருளியதும், என்றும் பொன்றாத பேரின்பப் பெரு நுகர்வே வீடுபேறென்று;

     'நீராள . . . நிற்க அருள்வாய்' - நீரின் தன்மையாக இடையறாதுருகி யோடும்படி, உள்ளன்பைக் கொடுத்தருளியதும் (நின்னின்நீங்கா) உன்னுடைய திருவருளே; மேலும் மேலும், உன்னுடைய திருவடியே நிலையான துணையென்று சிக்கெனப் பற்றின அடியேனைக் காத்தருள, ஒப்பற்ற திருவுளம் சிறிது உண்டாகுமானால், நில முதல் ஒலி யீறாகவுள்ள மெய்களால் அறியப்படாத வாய்வாளா (மோன) நிலையையே இடையறாப் பற்றுக்கோடாகக் கொண்டு எளியேன் அந்த நிலையில் நழுவாது நிற்கும்படி தண்ணளி புரிந்தருள்வாய்;

         'பார்க்குமிட . . . ணானந்தமே'

     (வி - ம்.) சாக்ஷி - சான்று; நடுவுநிலைமை. சமரசம் - பொதுமை. வேதாந்தம் - மறைமுடிபு. சித்தாந்தம் - முறை முடிபு. போதம் - அறிவு. மெய் - தத்துவம். தண்ணளி - கிருபை. பூராயம் - இன்றியமையாதது.

     வினைக்கீடாக வரும் நன்மை தீமைகளின் பயனாகிய இன்ப துன்பங்களை விருப்பு வெறுப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதலே மெய்யுணர்வாகும். இவ்வுண்மையை வருமாறு காண்க :

"நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
 அல்லற் படுவ தெவன்."
- திருக்குறள், 379.