(வி - ம்.) "கற்புறு சிந்தை மாதர் கணவரை யன்றி வேறோர், இற்புறத் தவரை நாடார்" என ஆசிரியர் பிறிதோரிடத்துக் கூறுவதுங் காண்க. உலகச்சார்பனைத்தும் உடல் பற்றிய உறவுச்சார்பாகும். இச் சார்புகள் முன்னேறி உயர்ந்து செல்லும் ஒருவர்க்கு வழிநடை நீக்கம் போன்றும், ஏணிப்படி நீக்கம் போன்றும் முடிநிலைச்சார்பு அடைந்தபோது தாமே நீங்குவனவாம். இச் சார்புகளில் காதலிருவர்க்கும் கடவுளருளால் அடைந்துள்ள வாழ்கைத்துணைச் சார்பே முடிநிலைச் சார்பாகும். இதுபோல் உயிர்கட்கு என்றும் நீங்கா முடிநிலைச்சார்பு விழுமிய முழுமுதற்றலைவனாம் சிவபெருமான் ஒருவனே யாவன்; அவ்வுண்மையினைத் திருவருளாலுணர்ந்து சார்ந்தவர்கள்1 ஏனைய உடற்சார் பொத்துக் காணப்படும் உயிரினங்களுள் திருவாணை பெற்றுத் தெய்வத்தொழில் மேவும் செத்துப்பிறக்கும் சிறுதெய்வச் சார்பினை எண்ணார். வழிநடையாளர் போல படிமுறையான் உயர்ந்து வருவோர் அச் சார்பினில் உறைத்து நிற்பர். இஃது அணுக்கமாம் அமைச்சுநிலை எய்தினவன் வாயிலோன் சார்பினை விழைதலும், அவன் தொழிலை வேட்டலும் அதன்பொருட்டு முயறலும் செய்யாமை போன்றும் அந்நிலை எய்தப்பெறாதார் அதனை விழைதலும், வேட்டலும் முயறலும் செய்தல் போன்றும் காணப்படும். இவ்வுண்மை வருமாறு :
| "பழுதில்தொல் புகழாள் பங்கநீ யல்லாற் |
| பற்றுநான் மற்றிலேன் கண்டாய் |
| செழுமதி யணிந்தாய் சிவபுரத் தரசே |
| திருப்பெருந் துறையுறை சிவனே |
| தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் |
| துணையென நினைவனோ சொல்லாய் |
| மழவிடை யானே வாழ்கிலேன் கண்டாய் |
| வருகவென் றருள்புரி யாயே" |
| - 8. வாழாப்பத்து - 10. |
(45)
வெளியில் நின்ற வெளியாய் விளங்கிய | ஒளியில் நின்ற ஒளியாம்உன் தன்னைநான் | தெளிவு தந்தகல் லாலடித் தேஎன்று | களிபொ ருந்தவன் றோகற்ற கல்வியே. |
(பொ - ள்) திருவருளால் அறிவுப் பெருவெளியின்கண் நிலைபெற்று நின்றருளும் பேரின்பப் பெருவெளியாய் விளங்குபவன் சிவபெருமான். நிலவுலகின்கண் ஒளிகொடுத்துக் கொண்டிருக்கும் ஞாயிறு, திங்கள், தீ, பொன், மணி முதலிய ஒளிப்பொருள்கட்கு ஒளி கொடுத்துக் கொண்டிருக்கும் ஒண்மையன் சிவன். அத்தகைய உன்னை அடியேன் எளியேனுக்குத் தெளிவறிவு தந்தருளிய கல்லால மரத்தடியில் வீற்றிருந்தருளும் தெய்வமென்று கருதியும், கூறியும், கைதொழுதும் களிப்பெய்துதற் பொருட்டன்றோ, அவர் அருளால் அடியேன் அவர்பால் கற்றுக்கொண்ட மெய்ந்நூற்கல்வி!
1. | 'புறச்சமய' சிவஞானசித்தியார், 8. 2 - 1. |