பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

357
வளம்பெறு ஞான வாரிவாய் மடுத்து
    மண்ணையும் விண்ணையுந் தெரியா
தளம்பெறுந் துரும்பொத் தாவியோ டாக்கை
    ஆனந்த மாகவே யலந்தேன்
களம்பெறு வஞ்ச நெஞ்சினர் காணாக்
    காட்சியே சாட்சியே அறிஞர்
உளம்பெறுந் துணையே பொதுவினில் நடிக்கும்
    உண்மையே உள்ளவா றிதுவே.
     (பொ - ள்) வற்றா வளம் பொருந்திய மூதறிவுப் பெருங்கடலை வாயினால் உண்டு விண்ணாகிய வானத்தையும், மண்ணாகிய நிலவுலகத்தையும் தெரியாதபடி கடலைச் சார்ந்த துரும்பென உயிரும் உடலும் பேரின்பமாக நின்று பின் வருந்தினேன். கள்ளமே குடிகொண்ட கரவாடும் வன்நெஞ்சினர் காணக்கூடாதபடி (அன்பர்க்குக்) காட்சியளிக்கும் காட்சிமெய்ப்பொருளே! அனைவர்க்கும் சான்றாயுள்ள சாட்சியே! மெய்யுணர்வினர்தம் தூயநெஞ்சினைக் கோயிலாகக் கொண்டருளும் உறுதுணையே! பொதுவாகிய தில்லைத் திருச்சிறம்பலத்துள் அருட்கூத்தியற்றும் அகலா மெய்ப்பொருளே! அடியேனுடைய உண்மையான நிலையிதுவாகும்.

     அளம் - உப்பளம்; கடல். களம் - கள்ளம்: இடைக்குறை.

(3)
 
உள்ளமே நீங்கா என்னைவா வாவென்
    றுலப்பிலா ஆனந்த மான
வெள்ளமே பொழியுங் கருணைவான் முகிலே
    வெப்பிலாத் தண்ணருள் விளக்கே
கள்ளமே துரக்குந் தூவெளிப் பரப்பே
    கருவெனக் கிடந்தபாழ் மாயப்
பள்ளமே வீழா தெனைக்கரை யேற்றிப்
    பாலிப்ப துன்னருட் பரமே.
     (பொ - ள்) அடியேனுடைய உள்ளத்தை நீங்காதுறைந்து எளியேனை வருவாயாக, வருவாயாக வென்று அழைத்து, கேடடையாத பேரின்பப் பெருவெள்ளத்தினையே விடாது பொழியும் தண்ணருள் மழையே! வெம்மை சிறிது மில்லாத குளிர்ந்த பேரருள் வீசும் திருவிளக்கே! வஞ்சனையாகிய இருளினை ஓட்டும் தூய பரந்த பேரொளி வெளியே! கருவென்று பேர் பெறும் பாழான மாயாகாரியப் பள்ளத்தில் அடியேன் வீழ்ந்து விடாமல் எளியேனைக் கரையேற்றிக் காத்தருள்வது நின் பொறுப்பாகும்.