பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

360
பெற்று உய்யும்படி எல்லாம் நின்னருட் செயலாகவே முடித்திடுதல் வேண்டும். உண்மை அறிவு இன்பவடிவாக வீற்றிருந்தருளும் மெய்க்குருவே.

     (வி - ம்.) உண்மை, அறிவு, இன்பம் என்னும் மூன்றும் முறையே ஒன்றாய், வேறாய், உடனாய் நின்று உதவியருளும் உண்மையினை உணர்த்துவ ஆகும். எல்லாச் செயலும் முறையுற இறைசெயலென்னும் வாய்மை வருமாறு :

"சலமிலனாய் ஞானத்தால் தனையடைந்தார் தம்மைத்
    தானாக்கித் தலைவனவர் தாஞ்செய்வினை தன்னால்
 நலமுடனே பிறர்செய்வினை யூட்டியொழிப் பானாய்
    நணுகாமல் வினையவரை நாடிக் காப்பன்
 உலகினிலென் செயலெல்லாம் உன்விதியே நீயே
    உண்ணின்றுஞ் செய்வித்துஞ் செய்கின்றா யென்றும்
 நிலவுவதோர் செயலெனக்கின் றுன்செயலே என்றும்
    நினைவார்க்கு வினைகளெல்லாம் நீங்குந் தானே."
- சிவஞானசித்தியார், 10. 2 - 2.
(8)
 
குருவுரு வாகி மௌனியாய் மௌனக்
    கொள்கையை உணர்த்தினை அதனால்
கருவுரு வாவ தெனக்கிலை இந்தக்
    காயமோ பொய்யெனக் கண்ட
திருவுரு வாளர் அநுபவ நிலையுஞ்
    சேருமோ ஆவலோ மெத்த
அருவுரு வாகி அல்லவாய்ச் சமயம்
    அளவிடா ஆனந்த வடிவே.
     (பொ - ள்) ஆசிரிய அருட்டிருக்கோலங்கொண்டு மௌனியாய் எழுந்தருளி வந்து, சிறந்த மௌனக்கொள்கையினை அடியேனுக்கு உணர்த்தியருளினை; அம்முறையினால் எளியேனுக்கு இன்னமோர் அன்னைவயிற்றுக் கருவினில் முன்னைப்பிறப்புகளைப் போல் இன்னம் பிறக்கநேரும் இயைபில்லை. ஆருயிர்கள் தங்கியுள்ள இவ்வுடலோ நிலையில்லாததெனத் திருவருளாற் கண்டுள்ள திருவாளர்களின் பட்டறிவெனப்படும் அனுபவ நிலையும் அடியேனுக்குச் சேருமோ என்ற பெருவேட்கை எளியேன் உள்ளத்தில் மிகுதியாக உள்ளது. அரிய பெரிய திருவுருவங்களாகியும், அவை அல்லாதனவாகியும் அறுவகைச்சமயங்களாலும் அளவிட்டறிய வொண்ணாத பேரின்பப் பெருவடிவே!

     (வி - ம்.) 'மௌனம்' என்பது பேச்சற்றநிலை. பேச்சற்ற நிலை என்பது இடையறாது உள்கி உணர்ந்து அவ்வுணர்வினுள் ஒடுங்கி உறையும் நிலை. இதனை உணர்த்துதலாவது இவ்வாறே நிற்கப்பணித்துப் பயிற்றல். பொய் என்பது தோன்றி யொடுங்கும் தன்மைத்தாய