பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

374
    (பொ - ள்.) முதல், நடு, முடிவாயும், எவ்வகைத் தொடக்காகிய பிணிப்பும் இல்லாமல் எள்ளில் எண்ணெய் போல் உள்ளும் புறம்புமாய் நிறைந்து நிற்கும் பேரொளிப் பெரும் பொருளே! பேரின்பமே! எங்கள் பெருமானே! நின் அடிமையாகிய யான் பேரின்பப் பெருவாழ்வில் நிலைத்து நிற்கும்படி உணர்த்தியருளா வகையாக அடியேனைக் கைவிட்டொதுக்குவது முறைமையாகுமோ? மிகவும் தாழ்வான யான் (நீ கைவிடின்) என்செய்வேன்? எளியேன் உள்ளம் மிகவும் துன்புறுத்துகின்றது. பொறிகள் மனத்தினும் மிகவும் கொடுமையாகவுள்ளன. அக் கொடுமை தீயினுமிக்கது. அதனால் எளியேனைக் கைவிடாதே.

(4)
வாயிலோ ரைந்திற் புலனெனும் வேடர்
    வந்தெனை யீர்த்துவெங் காமத்
தீயிலே வெதுப்பி உயிரொடுந் தின்னச்
    சிந்தைநைந் துருகிமெய்ம் மறந்து
தாயிலாச் சேய்போல் அலைந்தலைப் பட்டேன்
    தாயினுங் கருணையா மன்றுள்
நாயக மாகி யொளிவிடு மணியே
    நாதனே ஞானவா ரிதியே.
    (பொ - ள்.) (பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்தருள் செய்கின்ற தில்லைத் திருச்சிற்றம்பலத்தினுள், முழுமுதல்வனாக) பேரொளிவிடும் செம்மணியாம் மாணிக்கமே! நீங்காத்தலைவனே! மெய்யுணர்வுப் பெருங்கடலே! மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் வாயில்கள் ஐந்தின் வழியாக முறையே ஊறு, சுவை, ஒளி நாற்றம் ஓசை என்னும் புலன்களாகிய வேடர்கள் ஐவரும், விடாது தொடர்ந்து வந்து எளியேனை வலிந்திழுத்துக் கொடிய காமத்தீயிலே அழுத்தி வெதுப்பி உயிரொடுந் தின்னுதலால்; உள்ளம் வருந்தி உருகி என்னையே மறந்து தாயில்லாத சேயினைப் போன்று நிலைப்பிடமின்றி அலைந்து வருந்தினேன் (எளியேனை ஆண்டருள்தல்வேண்டும்.)

(5)
ஞானமே வடிவாய்த் தேடுவார் தேடும்
    நாட்டமே நாட்டத்துள் நிறைந்த
வானமே எனக்கு வந்துவந் தோங்கும்
    மார்க்கமே மருளர்தாம் அறியா
மோனமே முதலே முத்திநல் வித்தே
    முடிவிலா இன்பமே செய்யுந்
தானமே தவமே நின்னைநான் நினைந்தேன்
    தமியனேன் தனைமறப் பதற்கே.