(பொ - ள்.) இயல்பும் முழுமையுமாகிய மெய்யுணர்வாம் வாலறிவே வடிவாய்த் தேடுவாரால் தேடப்படும் பொருளே, அப் பொருளினுள் நிறைந்த திருவருள் வெளியே; அடியேன்பால் நெருங்கி வந்தோங்கும் அரும்பெரு நெறியே. இருட்சார்பாம் மாயை மருளினிற்பட்டார் அறிய வொண்ணாத மோனநிலையே, விழுமிய முழு முதலே, திருவடிப் பேறாகிய நல்லவிதையே, முடிவெய்தாது என்றும் ஒருபடித்தாயிருக்கும் பேரின்பப் பெருவாழ்வே, அடியேன் என்னை மறத்தற் பொருட்டு உன்னையே உறுத்து நினைந்தேன். ஒன்றை யழுந்தி உணரின் உண்டாம் தன்மறப்பாம், ஒன்றும் தன்மை சிவனடியாம் என்னும் உண்மையினை "முன்னம் அவனுடைய நாமங் கேட்டான்" என்னும் திருத்தாண்டகத் திருமாமறையா னுணர்க.
(6)
மறமலி யுலக வாழ்க்கையே வேண்டும்
வந்துநின் அன்பர்தம் பணியாம்
அறமது கிடைக்கின் அன்றியா னந்த
அற்புத நிட்டையின் நிமித்தந்
துறவது வேண்டும் மௌனியாய் எனக்குத்
தூயநல் லருள்தரின் இன்னம்
பிறவுயும் வேண்டும் யானென திறக்கப்
பெற்றவர் பெற்றிடும் பேறே.
(பொ - ள்.) கடவுளே! நின் மெய்யன்பர்தம் பணியென்று சொல்லப்படும் நல்லறமான அடியேனுக்கு நின் திருவருளால் கிடைக்கப்பெறின், பாவம் மிகுவதற்கு ஏதுவாகிய இவ்வுலக வாழ்க்கையே மேலும் வேண்டும். அல்லாவிட்டால் பேரின்பப் பெருவியப்பாம் நிட்டைகை கூடுதற் பொருட்டுப் பற்றற்ற உள்ளஞ்சேர் பண்பு நீங்காத் துறவது வேண்டும். அடிகள் எழுந்தருளி வந்து மௌன நிலையிலிருந்து அடியேனுக்குத் தூய நன்மை மிகுந்த திருவருள் தரப்பெறின் இன்னமும் இப்பிறவியே வேண்டும். யான் எனதென்னும் செருக்கற்ற திருவாளர் தப்பாது பெற்றிடும் பெரும் பேறே! 'இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' என்னும் திருமாமறைத் திருப்பாட்டுங் காண்க. கல்வியினில் காதல்கொண்டார் கண்ணார் விளையாட்டைச் செல்வனடியான்மருள் சேர்வின்றென்பதனால் எடுத்த பொற்பாதங் காணப்பெற்றாரை மருள் விடுத்தகலும்.