வாழி சோபனம் வாழிநல் லன்பர்கள் | சூழ வந்தருள் தோற்றமுஞ் சோபனம் | ஆழி போல்அருள் ஐயன் மவுனத்தால் | ஏழை யேன்பெற்ற இன்பமுஞ் சோபனம். |
(பொ - ள்.) திருவருளால் அடியேன் புகலும் வாழ்த்தானது, நன்மையினையே நாடி இடையறாது புரிந்து வரும் நல்லன்பர்கள் வாழ்க; அடியேனைச் சூழுமாறு வந்து பேரருள் புரிந்த திருவருளின் திருத்தோற்றமும் வாழ்க; கரையிலாப் பெருங்கடல் போன்ற திருவருளினையுடைய சிவகுருவின் மவுனத்தால் அடியேன் பெற்றுள்ள பேரின்பமும் வாழ்க.
சோபனம் - வாழ்த்து; நலம்.
(5)
கொடுக்கின் றோர்கள்பால் குறைவையா தியானெனுங் குதர்க்கம் | விடுக்கின் றோர்கள்பால் பிரிகிலா துள்ளன்பு விடாதே | அடுக்கின் றோர்களுக் கிரங்கிடுந் தண்டமிழ் அலங்கல் | தொடுக்கின் றோர்களைச் சோதியா ததுபரஞ் சோதி. |
(பொ - ள்.) கேள்வியிலும் செயலிலும் எல்லார்க்கும் யாண்டும் இனிமையே பயக்கின்ற தண்ணிய தனித்தமிழ்மாலையினைக் காதலாகிச் சூட்டுகின்ற மெய்யன்பர்களை ஆய்வு செய்யாததாகிய மேலாம் மேலாம் பேரொளிப்பிழம்பானது, மெய்யுணர்ந்து திருவருள் நினைவால் கொடுக்கும் பெருங் கொடையாளர்கட்கு எவ்வகைக்குறைபாடும் வைப்பதில்லை; யான் எனதென்னும் செருக்கற்று சழக்குரையாது வழக்குவழி நிற்பார்க்கு வழித்துணையாக விட்டு நீங்காது நிற்கும்; உள்ளன்பு விடாது திருவடியினையே புகலாக அணைந்து நிற்போர்க்கு கனிமிக இரக்கம் காட்டும்.
சிவபெருமான் தனித்தமிழ் அலங்கலின் இனித்தங்கண்டு கனிமிகவுவப்பன் என்னும் உண்மை வருமாறு :
| "மற்றுநீ வன்மைபேசி வன்றொண்டன் என்னும் நாமம் |
| பெற்றனை நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க |
| அற்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மைச் |
| சொற்றமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயார்." |
| - 12. தடுத்தாட் - 70. |
(6)
உலக மாயையி லேஎளி யேன்றனை | உழல விட்டனை யேஉடை யாய்அருள் | இலகு பேரின்ப வீட்டினில் என்னையும் | இருத்தி வைப்பதெக் காலஞ்சொ லாய்எழில் |