திருவடியின்பம் மேம்பட்டுச் சிறக்கவும், அவ்வின்பத்திற்கு மேலாய் அதன் நிலைக்களமாயுள்ள ஒப்பில்லாத சிவப் பெருவெளிக்கண் அந்தண்மையால் இருத்தி வைத்துள்ள குலதெய்வமாகிய மௌனகுருவின் செம்பொன் என வயங்கும் திருவடியினை நாடி உள்குவாம். நாடுதல் - சிந்தித்தல். உள்குதல் -தியானித்தல்.
(15)
நேற்றுளார் இன்று மாளா நின்றனர் அதனைக் கண்டும் | போற்றிலேன் நின்னை அந்தோ போக்கினேன் வீணே காலம் | ஆற்றிலேன் அகண்டா னந்த அண்ணலே அளவில் மாயைச் | சேற்றிலே இன்னம் வீழ்ந்து திளைக்கவோ சிறிய னேனே. |
(பொ - ள்.) நேற்றைப் பொழுதில் நோய்நொடி ஏதுமின்றித் தோற்றத்து நன்றாக விருந்த ஒருவரே, எதிர்பாராவண்ணம் திடும்மென இன்று மாண்டொழிந்தனர். இத்தகைய உலக நிலையாமையினைக் கண்ணாரக் கண்டும், இறைவனே நின் திருவடியினைத் தனித்தமிழ்த் திருமாமறைகளினால் போற்றி வழிபடுகின்றிலேன்; ஐயோ வீணாகக் காலம் போக்கினேன். இன்னமும் அடியேனால் அந்நிலையினைப் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. எல்லையற்ற பேரின்பப் பெருமையனே! அளவில்லாத பிறப்பு இறப்புகட்கு உட்படுத்தும் மாயாகாரியமாகிய சேற்றிலே சிறியேன் இன்னமும் வீழ்ந்து துன்பத்திலழுந்தவோ?
(வி - ம்.) அழுந்தல்-அனுபவித்தல். அந்தோ-ஐயோ. போற்றுதல் "போற்றி போற்றி" எனச் செந்தமிழ்த் திருமாமறை புகன்று பூத்தூவி வழிபடல். நிலையாமையின் உண்மை வருமாறு :
| "நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும் |
| பெருமை யுடைத்திவ் வுலகு." |
| - திருக்குறள், 339 |
(16)
போதம் என்பதே விளக்கொவ்வும் அவித்தைபொய் இருளாந் | தீதி லாவிளக் கெடுத்திருள் தேடவுஞ் சிக்கா | தாத லால்அறி வாய்நின்ற இடத்தறி யாமை | ஏது மில்லையென் றெம்பிரான் சுருதியே இயம்பும். |
(பொ - ள்.) (நம்முடைய அறிவுக்கு அறிவாய் நின்று நம் அறிவினை விளக்கும்) மூதறி வென்பது தனிச்சுடர் விளக்கினையொத்திருக்கும் : (அறிவை மறைத்து நின்று விளங்கவொட்டாது தடை செய்யும் அறியாமையாகிய) ஆணவவல்லிருள் நிலையில்லாது மடங்கும் இருளினை யொக்கும்; குற்றம் சிறிது மில்லாத திருவிளக்கினை எடுத்து அவ்விருளைத் தேடவேண்டு மென்று சென்றால் அது கைக்கு எட்டாது மறையும். அதனால் ஆருயிர் மூதறிவினுள்ளடங்கி (முழுநீறு பூசிய திருமேனி போன்று) அவ்வறிவாகவே நின்றவிடத்து அறியாமையாகிய ஆணவ வல்லிருளின் மேலீடு சிறிதும் இல்லையென்று எம்மிறைவன் மெய்யடியார் வாயிலாக வெளிப்படுத்தியருளிய பண்டை நான்மறைகளே பாங்குறப் பகரும்.