பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

393
     (வி - ம்.) மூதறிவு - திருவடியுணர்வு; முற்றுணர்வு; மெய்யுணர்வு முன்மறைத்த ஆணவமே மூதறிவு கைவந்தபின் மறையும். மெய்யுணர்வின்முன் ஆணவ வல்லிருள் அடங்கிவிடும். எனவே ஆணவத்தின் செய்கை மறைத்தலும், மறைதலுமாகிய மறைப்புத் தன்மையேயாம். இவ்வுண்மை வருமாறு :

"ஈண்டுச் சத்தினிடத்து அசத்துப் பிரகாசியா தென்றது."
- சிவஞானபோதம், 7. 1. மேற்கோள்.
"மெய்யினிடத்துப் பொய் அப்பிரகாசமாய் நிற்றலான்."
- " " ஏது.
"ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
 றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க்குயிராய்த்
 தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
 குளிக்கு முயிரருள் கூடும் படிகொடி கட்டினனே."
- கொடிக்கவி, 1. 338
(17)
சுருதி யேசிவா கமங்களே உங்களாற் சொல்லும்
ஒருத னிப்பொருள் அளவையீ தென்னவா யுண்டோ
பொருதி ரைக்கடல் நுண்மணல் எண்ணினும் புகலக்
கருத எட்டிடா நிறைபொருள் அளவையார் காண்பார்.
    (பொ - ள்.) (கேள்வி வழியாகப் பயின்று வந்தமையால் வேதம் சுருதி யெனப்பட்டது) சுருதியாகிய வேதமே, சைவ ஆகமங்களே, உங்களால் ஒப்பற்ற ஒருமுதலாயிருக்கும் மெய்ப்பொருளாம் சிவபெருமானின் உண்மைநிலையினை அளவிட்டுக் கூறச் சொல்லுண்டாமோ? கரைமோதும் அலைகளையுடைய கடலின்கணுள்ள நுண்ணிய மணலை ஒருவாறு அளவிட்டு எண்ணினும், சொல்லவும் எண்ணவும் எட்டாத யாண்டும் நீக்கமற நிறைந்து நிற்கும் மாறா மெய்ப்பொருளின் அளவையை எவரே காணவல்லார்? (ஒருவரும் இலர் என்பதாம்.)

     (வி - ம்.) விழுமிய முழுமுதல்வன் "மாற்றம் மனங்கழிய நின்ற மறையோன்" ஆதலால் "காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே" என்னும் தனித்தமிழ் மறையின்படி அவன் காட்டியருளக் காணுமதன்றி வேறெவ்வகையானும் எத்திறத்தானும் எவருங் காணார். நூல்களனைத்தும் தூமாயையின் ஆக்கப்பாடுகளேயாம். அவ்வுண்மை வருமாறு :

"வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம்
    விரும்பசபை வைகரியா தித்திறங்கள் மேலாம்
 நாதமுடி வானவெல்லாம் பாச ஞானம்
    நணுகிஆன் மாஇவைகீழ் நாட லாலே
 காதலினான் நான்பிரமம் என்னும் ஞானம்
    கருதுபசு ஞானமிவ னுடலிற் கட்டுண்
 டோதியுணர்ந் தொன்றொன்றா உணர்ந்திடலாற் பசுவாம்
    ஒன்றாகச் சிவனியல்பின் உணர்ந்திடுவன் காணே."
- சிவஞானசித்தியார், 9. 1 - 1
(18)