பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

400
மெய்யில் நின்றொளிர் பெரியவர் சார்புற்று விளங்கிப்
பொய்ய தென்பதை யொருவிமெய் யுணருதல்போதம்.
    (பொ - ள்.) அழகும் முதன்மையும் மிக்க ஐயனே! ஊழ்வினைப் பழக்கத்தால் மனம் ஒன்றுவிட்டொன்று பற்றி நினைக்கும்; மேலும் அம்மனம் இவ்வுலகத்தில் வழிவழியாக எவற்றுடனும் சேரும் திருவடிமெய்யுணர்வின்கண் திளைத்துத் திகழ்வோர் சிவனடியாராம் பெரியவராவர். அவர் சார்பினைத் திருவருளால் பெற்று விளக்க மெய்திச் சுட்டியுணரப்படும் பொருள்களனைத்தும் நிலையுதலில்லாத பொய்ப்பொருளென்பதனை உணர்ந்து அவற்றின் கண்ணுள்ள பற்றினை விட்டு நீங்கித் திருவடி மெய்ம்மையினை யுணர்தல் மூதறிவெனப்படும் சிவஞானமாகும்,

29.
குலமி லான்குணங் குறியிலான் குறைவிலான் கொடிதாம்
புலமி லான்தனக் கென்னவோர் பற்றிலான் பொருந்தும்
இலமி லான்மைந்தர் மனைவியில் லான்எவன் அவன்சஞ்
சலமி லான்முத்தி தரும்பர சிவனெனத் தகுமே.
    (பொ - ள்.) (விழுமிய முழு முதல்வன்) மாயாகாரிய முக்குணம் சிறிதும் இல்லாதவன்; பிறப்பினால் ஏற்படும் பெயரும் அடையாளமுமாகிய குறியில்லாதவனும், உலகோர் வகுத்துள்ள குலம் ஏதுமில்லாதவனும், ஒன்றானுங் குறைபாடில்லாதவனும், கொடுமைக்குள்ளாக்கும் புலன்களெனப்படும் விடயப்பற்றில்லாதவனும், தனக்கெனப் பிறிதொரு சார்பாகிய பற்றுக்கோ டில்லாதவனும், தான் உறைவதற்கோர் ஊரும் வாழும் இல்லமும் இல்லாதவனும், மக்கள் மனைவியென்னும் சுற்றத்தொடர்பு ஏதுமில்லாதவனும் ஆக என்றும் பொன்றா தொருபடித்தாய்த் திகழ்பவன் யாவன்? அவன் முழு முதல்வனாவன். அவன் மனத்தின் சலனமாகிய அசைவினைத் தடுத்துத் திருவடிப் பேறாகிய வீட்டினைத் தந்தருளும் சிவபெருமான் என்று வழுத்தத்தகும்.

(30)
கடத்தை மண்ணென லுடைந்தபோ
    தோவிந்தக் கருமச்
சடத்தைப் பொய்யெனல் இறந்தபோ
    தோசொலத் தருமம்
விடத்தை நல்லமிர் தாவுண்டு
    பொற்பொது வெளிக்கே
நடத்தைக் காட்டிஎவ் வுயிரையும்
    நடப்பிக்கும் நலத்தோய்.
    (பொ - ள்.) மண்ணாலாகிய சட்டியினை அது பயன்பெறாது உடைந்த பொழுதோ மண்ணென மொழிந்து மனங்கோடல் அறமாகும்? அதுபோல் நிலையில்லாத இவ்வுடலை இறக்குங் காலத்தோ அது நிலையாத் தன்மையினுடைய பொய்யெனக் கூறல் அறமாகும்?