(பொ - ள்.) சிற்றரும்பு போன்ற விளக்கமுறாத ஒருவனுடைய நிலை கண்டு சிறிய அறிவை ஆளுந்தன்மையனே! தன்னுடைய இந்நிலையினைத் தான் தெளியப்பெற்றால் அவ்வரும்பு பேரரும்பு எனப்படும் போதாகிப் பின் மணங்கமழ மலர்ந்து பேரறிவாகி ஆசானை அடுத்துக் கற்று விளங்கிய பேரறிவாளனாய்ப் பலரு மதித்திட மோனநிலையுடன் விளங்குவன். திருவடிப் பேறாகிய பேரின்பப் பெருநிலையின்கண் சென்றணைந்து என்றும் ஒன்றுபோ லின்புற்றிருப்பன்.
(34)
மயக்கு சிந்தனை தெளிவென இருநெறி வகுப்பான் | நயக்கு மொன்றன்பால் ஒன்றிலை யெனல்நல வழக்கே | இயக்க முறறிடும் மயக்கத்தில் தெளிவுறல் இனிதாம் | பயக்க வல்லதோர் தெளிவுடை யவர்க்கெய்தல் பண்போ. |
(பொ - ள்.) சார்ந்ததன் இயல்பாம் மனம் மயக்கத்தினைச் சார்ந்து அறிவு மயக்கமாய், தெளிவினைச் சார்ந்து அறிவு தெளிவாய் நிற்குமென இரண்டு பகுப்புள்ளது. ஒன்றிற் சார்ந்த மனத்துக்கு மற்றொன்றில்லையாகும். இது யாண்டும் நிகழும் முறைமையாகிய வழக்கேயாம். தெளிந்தவருள்ளமும் மயக்கத்தில் ஈடுபடுதல் இனிமையாகுமா? பயன்படுதற்கு வல்லமையுடைய தெளிவினர்க்கு மயக்கம் எய்துதல் பண்பாகுமா? (ஆகாதென்பதாம்.)
(35)