கணம தேனுநின் காரணந் தன்னையே கருத்தில் | உணரு மாதவர்க் கானந்தம் உதவினை யொன்றுங் | குணமி லாதபொய் வஞ்சனுக் கெந்தைநிர்க் குணமா | மணமு லாமலர்ப் பதந்தரின் யாருனை மறுப்பார். |
(பொ - ள்.) இறைப்பொழுதேனும் நின்னுடைய அனைத்துயிர்க்கும் அனைத்துலகினுக்கும் வினைமுதற்காரணமாய் விளங்கும் நின் திருவடியினையே உள்ளத்தமைத்து உணரும் பெருந்தவத்தோர்க்குப் பேசவொண்ணாப் பேரின்பப் பெருவாழ்வினை அளித்தருளினை; சிறிதும் நற்குணமில்லாத பொய்யும் கரவும் நிறைந்த எளியேனுக்கு எந்தையே முக்குணமில்லா எண்குணனே, நறுமணமிக்கு விளங்குகின்ற மலர் போலும் திருவடியினைத் தந்தருள்வையாயின் (அங்ஙனஞ் செய்யவொட்டாதபடி) நின்னை இறை நின்று தடுப்பவர் யாவர்? (ஒருவரும் இலர் என்பதாம்.) ஒன்றும்-சிறிதும்.
(8)
கன்னல் முக்கனி கண்டுதேன் சருக்கரை கலந்த | தென்ன முத்தியிற் கலந்தவர்க் கின்பமா யிருக்கும் | நன்ன லத்தநின் நற்பதந் துணையென நம்பச் | சொன்ன வர்க்கெனா லாங்கைம்மா றில்லைஎன் சொல்வேன். |
(பொ - ள்.) கருப்பஞ்சாறும், முக்கனியும் கற்கண்டும், நற்றேனும் சருக்கரையும்1 ஒன்றாய்க்கலந்ததென்று சொல்லும்படி திருவடிப் பெரும்பேற்றின்கண் நின் திருவருளால் கலந்த மெய்யடியார்கட்குப் பிரித்தறியவாராத பேரின்பமாக இருந்தருள்வை. அத்தகைய நன்னல நிறைந்த நின் திருவடியினைத் துணையெனக் கொண்டுய்யுமாறு நம்பிக்கை கொள்ள அடியேனுக்குச் செவியறிவுறுத்தருளிய சிவ குருவினுக்கு அடியேன் செய்யும் ஈடு யாதுமில்லையே. அக் குருவின் திருவருட் பெருமையினை என்னென்றெடுத்தியம்புவேன்? செவியறிவுறுத்தல்-உபதேசம் புரிதல்.
(9)
தந்தை தாய்தமர் மகவெனும் அவையெலாஞ் சகத்தில் | பந்த மாம்என்றே அருமறை வாயினாற் பசர்ந்த | எந்தை நீஎனை இன்னமவ் வல்லலில் இருத்தில் | சிந்தை தான்தெளிந் தெவ்வணம் உய்வணஞ் செப்பாய். |
(பொ - ள்.) நின்னை நினையாது தந்தை, தாய், தமர், மகவு என்னும் முறைகள் பிறப்பெடுத்துழலும் உடலுறவு பற்றி நிகழ்வனவாகும். (அம் முறைகளே உயிர் உறவு பற்றியுணரின் இறைவண்ணமாம் இயைபு. "அப்பனீ அம்மை நீ" எனத் தொடங்கும் திருமாமறையின் முறையாகத் தோன்றும்) இவ்வுறவுகள் இவ்வுலகத்தின்கண் படிக்கும் மாணவர்க்கு விளையாட்டுத் தடையாவது போன்று தடைசெய்யும்
1. | 'இரும்பைக்' சிவஞான சித்தியார், 11 - 2 - 5. |