பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

41

     (பொ - ள்.) 'நித்தியமாய் . . . சுடராய்' - (தோற்ற மாற்றமாகிய இயல்புகள் சிறிதுமின்றி) முக்காலத்தும் உள்ளவராய், இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவராய், வடிவமில்லாதவராய், நோயில்லாதவராய், எங்குஞ் செறிந்த நிறைவுடையவராய் (தன்னைவிட்டு நீங்காத) தற்கிழமையாயுள்ள அருளுடையவராய், (அன்பிலார்க்கு) நனிமிகு சேய்மையராய், பேரன்பாகிய பெருங்காதலுடையார்க்கு அண்மையராய், நாலாம் நிலையாகிய துரியமென்னும் அருள்வெளியில் நிறைந்த பேரொளிப் பிழம்பினராய்;

     'எல்லாம் . . . . . . . சிந்தை செய்வாம்' - எவற்றினுக்கு நிலைக்களமாகிய தாயகமாய், பேரின்ப வண்ணமாய், நினைப்புக்கும் சொல்லுக்கும் எட்டாத பேரறிவுருவாய்த் திகழும் நிலையினராய் உள்ள ஒப்பில்லா ஒரு முதலாம் பேரின்பத் தொடக்கத்தினையுடைய பெருவெளியைக் குழைந்த வுள்ளத்தால் விழைந்து தொழுவாம்.

     (வி - ம்.) நித்தியம் - அழியாமை. நிட்களம் - வடிவின்மை. நிராமயம் - நோயின்மை. தாரகம் - நிலைக்களம்; தாயகம். ஆனந்தம் - இன்பம். சித்துரு - அறிவுவடிவம். சுகாரம்பம் - இன்பத்தொடக்கம்.

     இறைவன் திருமேனிகொண்டருள்வது மாயா காரியமன்று. திருவருட்காரியமாகும். அதுவும் ஆருயிர்கள் உய்தல்வேண்டும் என்னும் அந்தண்மையாற் கொள்வதாகும், அதனால் அத்திருமேனி நோயிலாத் தன்மையது என்றல் தானே விளங்கும். இவ்வுண்மை "மாயைதான் மலத்தைப் பற்றி" (1. 2 - 13) என்னும் திருப்பாட்டானுணர்க.

     இறைவன் தானே விளங்கும் பேரறிவினன் என்பது வரும் திருக்குறளானுணர்க:

"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
 நற்றாள் தொழாஅர் எனின்."
- திருக்குறள், 2.
(1)
யாதுமன நினையுமந்த நினைவுக்கு நினைவாகி
    யாதின் பாலும்
பேதமற நின்றுயிருக் குயிராகி அன்பருக்கே
    பேரா னந்தக்
கோதிலமு தூற்றரும்பிக் குணங்குறியொன் றறத்தன்னைக்
    கொடுத்துக் காட்டுந்
தீதில்பரா பரமான சித்தாந்தப் பேரொளியைச்
    சிந்தை செய்வாம்.
     (பொ - ள்.) 'யாதுமன . . . நின்றுயிருக் குயிராகி' - (உட்கருவிகளுள் ஒன்றாகிய) மனமானது யாதொன்றை எண்ணுமோ, அவ்வெண்ணத்துக்குள் எண்ணமாய் உள்நின்று உன்னுவித்தும், எதனிடத்திலும் வேற்றுமை யற நின்று உயிருக்கு உயிராகி;