பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

42

     'அன்பருக்கே . . . . . . சிந்தைசெய்வாம்' - தன்பால் நீங்கா மெய்யன்புடைய அடியவர்கட்கு வற்றாப் பேரின்பமாகிய குற்றமில்லாத அமுதவூற்றரும்பி (மாயாகாரிய) மூக்குணங்களுள் ஒரு குணமுமின்றி, அங்ஙனமே வடிவும் மாயாகாரியப் பெயரும் ஏதுமின்றி, (உடனாய் நின்று காட்டிக் காண்டல் அவன் இயல்பாதலின்) தன்னைக் கொடுத்துக் காட்டுங் குற்றமில்லாத எந்நெறிக்கு மேலான முன்னெறியாகிய செம்பொருட்டுணிவாம் சித்தாந்தப் பேரொளிப் பிழம்பினைச் சிந்தை செய்வாம்.

     (வி - ம்.) பேதமற - வேற்றுமை நீங்க. இறைவன் மாயையின் குணங்களில்லாதவன். தன்னின் வேறல்லாத் திருவருட்குணங்கள் எட்டும் உள்ளவன். அவ்வுண்மை வருமாறு காண்க:

"கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
 தாளை வணங்காத் தலை." -
- திருக்குறள், 9
"நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்த்
 தற்பரமாய் நின்ற தனிமுதல்வன்-அற்புதம்போல்
 ஆனா அறிவாய் அளவிறந்து தோன்றானோ
 வானே முதல்களையின் வந்து."
- சிவஞானபோதம், 9. 2. 1.
     மெய்யடியார்கட்குப் பேரின்பவண்ணமாய் நின்று இன்பமருளும் பெற்றியினை வருமாறுணர்க:

"தேவ தேவன் மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன்
 மூவ ராலும் அறியொ ணாமுத லாய ஆனந்த மூர்த்தியான்
 யாவ ராயினும் அன்ப ரன்றி அறியொ ணாமலர்ச் சோதியான்
 தூய மாமலர்ச் சேவ டிக்கண்நஞ் சென்னிமன்னிச் சுடருமே."
8. சென்னிப்பத்து, 1.
"நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
 புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்
 பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
 நக்கு நிற்ப ரவர் தம்மை நாணியே."
-5. 90. 9.
(2)
பெருவெளியாய் ஐம்பூதம் பிறப்பிடமாய்ப் பேசாத
    பெரிய மோனம்
வருமிடமாய் மனமாதிக் கெட்டாத பேரின்ப
    மயமாய் ஞானக்
குருவருளாற் காட்டிடவும் அன்பரைக்கோத் தறவிழுங்கிக்
    கொண்டப் பாலுந்
தெரிவரிதாய்க் கலந்ததெந்தப் பொருள் அந்தப் பொருளினை யாஞ்
    சிந்தை செய்வாம்.