பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

43

     (பொ - ள்.) 'பெருவெளியாய் . . . . . . மயமாய்' - அருட்பெருவெளியாய், (மாயையினின்றும்) ஐம்பெரும் பூதமும் தோன்றுதற்கு வினை முதற் காரணமாய், வாய்வாளாமையாகிய பேசாத மோன நிலையில் வெளிப்படும் நிலைக்களமாய், மாற்ற மனங்கட்கு எட்டாத பேரின்பத்ததாய்;

     'ஞான . . . சிந்தைசெய்வாம்' - திருவடியுணர்வு கைவரச் செய்யும் சிவகுருவினருளால் காட்டியருளவும், மெய்யன்பர்களுடன் செய்யத்தக்க உறவுகொண்டு, தம்முனைப்பால் வரும் சுட்டுணர்வும் சிற்றுணர்வும் நீங்க விழுங்கிக்கொண்டு அதன் மேலும், அறிதற் கரிதாய்க் கலந்து நின்றருள்வது எந்தப் பொருள் அந்தப் பொருளை அடியேம் சிந்தை செய்வாம்.

     (வி - ம்.) வினைமுதற்காரணம் - நிமித்தகாரணம். மாற்றம் - சொல். தனக்குத்தானே ஒப்பாகிய மேலான அப் பெரும் பொருளின் உன்முகத்தூண்டுதலினால் திருவருளாற்றலே செவ்வி நோக்கிச் சிவகுருவாய்த் தோன்றியருளி மெய்யன்பர்கள்தம் முனைப்பறிவை மாற்றுவித்துத் தூயனாக்கிச் செவியறிவுறூஉவாகிய குருமொழி வாயிலாக உணர்த்தியருளலும், அவ்வாசிரியத்திருமேனி மறைந்தருளிச் சிவத்துடன் கூடி அவ்வடிமையைச் சிவன் விழுங்குமாறு செய்தருளும். இதுவே விழுங்கியருளு முறைமையாம்.

இகபரமும் உயிர்க்குயிரை யானெனதற் றவர்உறவை
     எந்த நாளுஞ்
சுகபரிபூ ரணமான நிராலம்ப கோசரத்தைத்
     துரிய வாழ்வை
அகமகிழ வருந்தேனை முக்கனியைக் கற்கண்டை
     அமிர்தை நாடி
மொகுமொகென இருவிழிநீர் முத்திறைப்பக் கரமலர்கள்
     முகிழ்த்து நிற்பாம்.
     (பொ - ள்.) 'இகபரமு . . . . . . துரிய வாழ்வை' - கட்டுநிலையாகிய இம்மையும் ஒட்டு நிலையாகிய அம்மையும் ஆகிய இரண்டிடத்தும் ஆருயிர்கட்கு உயிர்க்குயிராய் நின்று துணைபுரிந்தருளும் பேருயிரை, அகப்பற்றாகிய யான் என்பதும், புறப்பற்றாகிய எனதென்பதும் முற்ற அற்றவர்க்கு அண்ணியமாய் நின்றருளும் உறவை, எக்காலத்தும் பேரின்பநிறைவானதும், பற்றுக்கோடில்லதும் (அருளால் உணர்வினுள் நின்று உணர்த்த) உணரப்படுவது மாகிய ஒன்றைத் துரியமாகிய பெருவெளியில் நின்று (தன்னைச் சிறப்பாகச் சார்ந்தார்க்குப்) பேரின்பம் அளித்தருளும் பெருவாழ்வை;

     'அகமகிழ . . . . . . முகிழ்ந்து நிற்பாம்' - (காதலால் உள்குவார் கனிவுள்ளத்தின்கண்ணே) உள்ளப் பெருமகிழ்வு ஊற்றெடுத்து உண்டாகும் படி வரும் குறையா இனிப்புமிகுந் தேனொப்பதை, வாழை, மா, பலா