பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

44

என்று சொல்லப்படும் முக்கனியின் சுவை போன்ற மிக்க சுவையை, இனிப்பே வடிவாயுள்ள கற்கண்டை யொத்த கட்டியை, (என்றும் பொன்றாது நின்று) உண்டாரையும் அழியாதிருக்கச்செய்யும் விழுமிய அமிழ்தத்தை (இடையறாது மறவாநினைவுடன் தனைமறந்து) உள்குதலாகிய தியானம் புரிந்து (அதுகாரணமாக) இரண்டு விழிகளிலும் நின்று மொகு மொகு என இன்பக்கண்ணீர் முத்தாய்ப் பொழியக் கைகளிரண்டும் உச்சியின் மேற் குவித்து (மீளா அடிமையாய்) நிற்பாம்.

     (வி - ம்.) இகம் - இம்மை, இவ்வுலகம். பரம் -அம்மை; மேலுலகம்; சிவவுலகம். சுகம் - இன்பம். பரிபூரணம் - முழு நிறைவு. நிராலம்பம் - பற்றுக்கோடில்லது. கோசரம் - (அருளால் உணர்த்த உணர்வில்) தெரிவது. துரியம் - பரவெளி; பெருவெளி. முக்கனி - வாழை, மா, பலாக்கனிகள்.

     யான் என்னும் செருக்கு - தன் முனைப்பால் எல்லாஞ் செய்தேன் என ஒருவன் எண்ணும் எண்ணம். அஃதறுதல் என்பது, தன்னை ஆண்டவனுக்கு மீளா அடிமையாக ஒப்புவித்துத் தன்னால் செய்யப்படுவன அனைத்தும் ஆண்டவன் செய்கையென மெய்ம்மையாகத் தெளிந்து துணிதல். எனதென்னும் செருக்கு உயிர்ப்பொருள் உயிரில் பொருள்களாகியவை யனைத்தும் தன்னால் தேடப்பட்டன வென்றும் தன்னுரிமையென்றும் அகங்கரித்துச் செருக்குதல். இஃதறுத லென்பது, அவையனைத்தும் முறையே ஆண்டவனின் அடிமையும் உடைமையுமாம் என்னும் உண்மையுணர்ந்து அவை தன்பால் வைத்தருளப்பட்ட இரவற் பொருள்கள் என்றும், அவற்றைப் பயன்படுத்துவதும் ஆண்டவன் திருவருட் குறிப்பின்வழி என்றும் திண்ணமாக எண்ணிப் பயன்பட்டும் பயன்படுத்தியும் வருதலென்பதாம். இவற்றை வரும் செந்தமிழ்ப் பொதுமறையான் உணர்க :

"யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
 குயர்ந்த உலகம் புகும்."
- திருக்குறள், 346.
"இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
 மயலாகும் மற்றும் பெயர்த்து."
- திருக்குறள், 344.
     இறைவன் கட்டாகிய பெத்தத்தினும் ஒட்டாகிய முத்தியினும் உயிர்க்குயிராய் நின்று முறையே மறைந்தும் வெளிப்பட்டும் விளங்கி உடனாய்த் துணைபுரிந்தருள்வன்.

அவ்வுண்மையினை வருமாறுணர்க :

     "பன்னிறங் கவரும்" (69) எனத் தொடங்கும் சிவப்பிரகாசத்தா னுணர்க.

     முதல்வன் திருவடிப் பேரின்பத்தினுக்கு ஒப்புரைப்பது எப்பாலார்க்கும் அரிதாகும். எனினும், உலகோர் நுகர்ந்து கண்டுணர்ந்த சுவைப்பொருள்களைத் தொகுத்துரைத்து ஒருவாறுணர்ச்சி கொளுவுவதே உயர்ந்தோரியல்பாகும். அவ்வுண்மை வருமாறுணர்க :