மண்ணும் விண்ணும்மற் றுள்ளன பூசமும் மாறாப் | பெண்ணும் ஆணுமாய் அல்லவாய் நிற்கின்ற பெரியோய். |
(பொ - ள்.) கலப்பினால் மண்ணுலகமாகியும், அதுபோல விண்ணுலகமாகியும், ஏனை நீர், நெருப்பு, காற்று, வானமாகிய பூதங்களாகியும், உடம்பெடுத்த உயிர்களனைத்தும் விட்டு நீங்காது ஒட்டி வாழும் ஆண் பெண்ணா 1 கியும், பொருட்டன்மையால் இவையனைத்தும் அல்லவாய் நிற்கின்ற பிறவாயாக்கைப் பெரியோனே, கண்ணிற் கருமணியென நின் திருவடியினைத் தொழும் மெய்யன்பர்களின் தூயவுள்ளத்தின்கண் மிக்கோங்கித் திகழ்கின்ற நின்திருவருள் அடியேனுக்கு எந்தநாள் கிடைக்குமோ? (உடனே தந்தருளவேண்டுமென்பதாம்.)
(23)
சகமெ லாந்தனி புரந்தனை தகவுடைத் தக்கோர் | அகமெ லாநிறைந் தானந்த மாயினை அளவில் | மகமெ லாம்புரிந் தோரைவாழ் வித்தனை மாறா | இகமெ லாமெனைப் பிறந்திடச் செய்ததேன் எந்தாய். |
(பொ - ள்.) அனைத்துலகங்களையும் பொதுவறக் காத்தருள் செய்தனை; (இருவினையொப்பு, மலபரியாகா, திருவருள் வீழ்ச்சி திருவருள் வலத்தால் எய்தப்பெற்ற) தகுதியுடைய தக்கோர் தூய உள்ளமெல்லாம் மேலோங்கி நிறைந்து நின்று பேரின்பப் பெரும் பெருக்கு ஆகியருளினை; பெரும்பயனைத் தரும் அளவில்லாத சிவ வேள்வியினைப் புரிந்த செந்நெறிச் செல்வர்களைத் திருவடிப்பேறளித்து வாழ்வித்தருளினை; எளியேனை நீங்காமல் மீண்டும் மீண்டும் இவ்வுலகிடைப் பிறந்திடுமாறு செய்தருளியது எதன்பொருட்டு? எளியேன் தந்தையே! சிவ வேள்வியின் சீர்மை வருமாறு :
| "ஆதி மாமறை விதியினால் ஆறுசூழ் வேணி |
| நாத னாரைமுன் னாகவே புரியுநல் வேள்வி |
| தீது நீங்கநீர் செய்யவும் திருக்கழு மலத்து |
| வேத வேதியர் அனைவரும் செய்யவும் மிகுமால்." |
| - 12. சம்பந்தர், 429. |
கொலைபுலை இல்லாக் குணமுறு நல்வேள்வி, நிலைசிவன்றாள் கூட்டுதல் வேள்வி எனும் மெய்ம்மையினைத் தமிழ்மறையின்கண் காண்க.
(24)
ஏய்ந்த நல்லருள் பெற்றவர்க் கேவலாய் எளியேன் | வாய்ந்த பேரன்பு வளர்க்கவுங் கருணைநீ வளர்ப்பாய் | ஆய்ந்த மாமறை எத்தனை அத்தனை அறிவால் | தோய்ந்த பேர்கட்குந் தோன்றிலாத் தோன்றலாந் தூயோய். |
1. | 'அவையே தானேயாயிரு' சிவஞானபோதம், நூற்பா. 2. |