(பொ - ள்.) பொருந்திய நின்திருவடியைப் பெற்ற மெய்யடியார்கட்கு நின் திருவருளால் எளியேன் காதலுடன் நின்று பேரின்பப் பெரும்பணி செய்யுமாறு நின் தண்ணளியினை அடியேன்பால் வளர்த்தருள்வாயாக; ஆராயப்பட்ட பெரிய வேதங்கள் எத்தனையுண்டோ அத்தனையும் கற்றுவல்ல அறிஞர்க்கும் நின் திருத்தோற்றத்தினைக் காட்டியருளாத பெரியோனாகிய தூயோனே!
(25)
தக்க நின்னருட் கேள்வியோ சிறிதின்றித் தமியேன் | மிக்க தெய்வமே நின்னின்ப வெள்ளத்தில் வீழேன் | ஒக்கல் தாய்தந்தை மகவெனும் பாசக்கட் டுடனே | துக்க வெள்ளத்தில் ஆழ்கின்றேன் என்செய்வான் துணிந்தேன். |
(பொ - ள்.) மிக்க தகுதியினையுடைய நின்திருவருட் கேள்வியாம் சிறப்பினை ஒரு சிறிதும் கேட்கும் பேறில்லாத எளியேன் மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் நின்றதருளும் தனிப்பொரும் முதல்வனே. நின்திருவடிப் பேரின்பப் பெருவெள்ளத்தில் மூழ்கி இன்புறும் பேறும் இல்லாதவனானேன்; அதனால், சுற்றம், தாய், தந்தை பிள்ளைகள் என்று சொல்லப்படும் கட்டுக்களால் துன்ப வெள்ளத்தில் ஆழ்கின்றேன்; என்ன செய்தற் பொருட்டுத் துணிவு கொண்டேன்.
(26)
பவம்பு ரிந்திடும் பாவியேற் கருள்நிலை பதியத் | தவஞ்செ யும்படித் தயவுசெய் தருள்வதே தருமம் | அவம்பு ரிந்திடார்க் கானந்த அமிர்தத்தை அளிக்க | நவங்கொள் தத்துவத் திரையெறி கடலெனும் நலத்தோய். |
(பொ - ள்.) பிறப்பிற்கேதுவாகிய வீண் தொழில்களைக் கனவிலுங்கருதாத மெய்யன்பர்கட்கு நின்திருவடிப் பேரமிழ்தனைக் கொடுத்தற்பொருட்டு; வியத்தகு புதுமையாகக் காணப்படும் மெய்களாகிய தத்துவ அலைகளை வீசிக்கொண்டு வரும் பெருங்கடலெனப்படும் நன்மையினையுடையோனே! பிறப்பினுக்கு வித்தாம் பாவமே புரிந்திடும் பாவியேனுக்கு நின்திருவருள் நிலை பதியும்பொருட்டு நின் வழிபாடாம் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நன்னெறி நாற்படியாம் நற்றவத்தினை அடியேன் புரியுமாறு தண்ணளிபுரிவதே நன்மையாம். நவம் - புதுமை.
(27)
உற்று ணர்ந்தெலாம் நீயல தில்லையென் றுனையே | பற்று கின்றனர் எந்தைநின் னடியர்யான் பாவி | முற்று மாயமாஞ் சகத்தையே மெய்யென முதல்தான் | அற்றி ருந்திடத் தொழில்செய்வான் தனிநிக ரானேன். |
(பொ - ள்.) நின் மெய்யடியார்கள் அனைவரும் திருவருளால் ஆராய்ந்துணர்ந்து சுட்டியுணரப்படும் மாயாகாரியப் பொருளனைத்தும்