ஆரா அமுதென மோனம் வகித்துக்கல் லால்நிழற்கீழ்ப் | பேராது நால்வ ருடன்வாழ்முக் கண்ணுடைப் பேரரசே | நீரா யுருகவுள் ளன்புதந் தேசுக நிட்டையைநீ | தாரா விடின்என் பெருமூச்சுத் தானத் தனஞ்சயனே. |
(பொ - ள்.) உண்ண உண்ணத் தெவிட்டுதலாகிய வெறுப்புத் தட்டாத அமிழ்தமென்று சொல்லப்படும் மோன நிலையினை மேற்கொண்டு, கல்லால நீழற்கீழ் நீங்காதுறைந்து, சனகர் முதலிய நால்வருக்கு அறமுரைத்து, அவருடன் வாழ்ந்தருளுகின்ற மூன்று திருக்கண்களையுடைய தனிப்பெரும் வேந்தே! அடியேனுடைய உள்ளத்தன்பு நீராளமாக உருகும்படி திருவடி நிட்டையினைத் தேவரீர் தந்தருளாவிடின்; அடியேன் நெட்டுயிர்ப்பு; (ஒருவர் இறந்தபின் அவர் தம் மண்டையைக் கிழித்து வெளியாகும் வீங்கற்காற்றெனப்படும்.) அத்தனஞ் சயனே.
(வி - ம்.) காற்றெனினும் வாயு எனினும் ஒன்றே; அக் காற்று பத்து வகைப்படும் அவை வருமாறு :
1. உயிர்க்காற்று, 2. மலக்காற்று, 3. தொழிற்காற்று, 4. ஒலிக்காற்று. 5. நிரவுகாற்று, 6. தும்மற்காற்று, 7. விழிக்காற்று, 8. கொட்டாவிக்காற்று, 9. இமைக்காற்று, 10. வீங்கற்காற்று எனப்படும். இவை முறையே, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனவுஞ் சொல்லப்படும்.
(20)
வாயுண்டு வாழ்த்த மவுனஞ்செய் போது மவுனஅருள் | தாயுண்டு சேயென்ன என்னைப் புரக்கச் சதானந்தமாம் | நீயுண்டு நின்னைச் சரண்புக நானுண்டென் நெஞ்சம்ஐயா | தீயுண் டிருந்த மெழுகல வோகதி சேர்வதற்கே. |
(பொ - ள்.) அழகிய முதல்வனாகிய ஐயனே! நின் திருவடியினை வாயார வாழ்த்தியுய்ய அடியேனுக்கு வாயுண்டு; மோன நிலையினை மேற்கொண்டு நிற்கும்போது அந்நிலையினைக் கைகூடும்படி செய்தருளத் திருவருளாந் தாயுண்டு; அடியேனைக் காத்தருள என்றும் பொன்றாப் பேரின்பப் பொருவாழ்வினை யூட்டியருளும் நீயுண்டு; நின்திருவடியினைப் புகலிடமாகக்கொண்டு பேரின்பம் நுகர மீளா ஆளாம் அடியேனுண்டு; இத்தனையும் ஒருங்கமைந்தபோது அடியேன் நெஞ்சம் உடனாவதற்குத் தீயினைக் கண்ட மெழுகுபோன்று எளிதாம் என்க.
(21)
கல்லால் எறிந்துங்கை வில்லால் அடித்துங் கனிமதுரச் | சொல்லால் துதித்தும்நற் பச்சிலை தூவியுந் தொண்டரினம் | எல்லாம் பிழைத்தனர் அன்பற்ற நான்இனி ஏதுசெய்வேன் | கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கட் குருமணியே. |