பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

435
கண்டேன் நினதருள் அவ்வரு ளாய்நின்று காண்பதெல்லாம்
உண்டே யதுவும் நினதாக்கி னேன்உவட் டாதஇன்பம்
மொண்டே அருந்தி இளைப்பாறி னேன்நல்ல முத்திபெற்றுக்
கொண்டேன் பராபர மேயெனக் கேதுங் குறைவில்லையே.
    (பொ - ள்.) அடியேன் நின் திருவருளைக் காணும் பெரும்பேறு பெற்றேன்; எளியேன் அத் திருவருள் வயப்பட்டு அது கண்ணாகக் காணும் பொருளனைத்தும் உண்டாம்; அங்ஙனங் கண்டவற்றையும் நின்உடைமை என்னும் உண்மையோர்ந்து (நின்னடியேன் செய் பணிகள் நின்தொண்டே நின்னருளே, நின்னடிக்கே ஒப்புவித்தேன் நேர்ந்து என்னும் முறைமையால்) பூவுடன் புனலொழுக்கி (உன்னடிக்கே ஒப்புவித்தேன்; உண்ண உண்ண வெறுப்புத்தட்டாத) உலவா இன்பமுணர்வினின் நுகர்ந்து பிறவிக் கொடுமையால் வந்த பேரிளைப் பினை யாறினேன். நல்ல திருவடிப்பேறும் பெற்றுக்கொண்டேன். மேலாம் தனிமுதற் பொருளே! அடியேனுக்கு இனிச் சிறிதுங் குறைபாடு எந்தவகையிலும் இல்லை.

(27)
மேற்கொண்ட வாயுவங் கீழ்ப்பட மூலத்து வெந்தழலைச்
சூற்கொண்ட மேக மெனவூமை நின்று சொரிவதைஎன்
னாற்கண்ட தன்று மவுனோப தேசிய ளிக்கையினிப்
பாற்கண்டு கொண்டனன் மேலே அமிர்தம் பருகுவனே.
    (பொ - ள்.) மேல் நோக்கிச் செல்லும் காற்றினைக் கீழ்நோக்கிச் சென்று மூலநிலைக்களத்தினிலுள்ள வெவ்விய தழலினை எழுப்பிக் கருக்கொண்ட மேகம் போன்று ஊமை எனப்படும் மவுன நிலையினின்று பொழிதலை அடியேன் தனித்துக் கண்டதில்லை; மோனமாய் வந்து ஆண்டுகொண்ட சிவகுருவின் திருவருளால் அவர் காட்டியருள அடியேன் இவ்விடத்தில் கண்டுகொண்டேன்; இனிமேல் நெற்றிப் புருவநடுவின்கண் உறைந்துருகும் திங்கள்மண்டிலத் தீந்துளி யமிழ்தினைச், சிறப்புற உண்பேன்.

(28)
சொல்லால் தொடர்பொரு ளால்தொட ராப்பரஞ் சோதிநின்னை
வல்லாளர் கண்ட வழிகண்டி லேன்சக மார்க்கத்திலுஞ்
செல்லாதென் சிந்தை நடுவே கிடந்து திகைத்துவிம்மி
அல்லான தும்பக லானதும் வாய்விட் டரற்றுவனே.
    (பொ - ள்.) தூமாயையினின்று எழும் எழுத்தோசையின் விரிவாகக்காணப்படும் சொற்களாலும், அச் சொற்களின் இயைபால் காணப்படும் தொடர்களின் பொருள்களாலும் தொடரவொண்ணாத பேரருட் பெருஞ்சுடரே! நின்திருவடியினைப் பேரறிஞர்களாகிய வல்லாளர்கள் கண்டருளிய நன்னெறியினை நாயேன் கண்டிலேன்; நிலையாவுலக உண்மையினை நின்னருளால் கண்டுகொண்ட எளியேன் உள்ளம் அவ்வுலக வழியிலும் இனிச் செல்லுவதற்கில்லை. எனவே இரண்டுக்கும்