(பொ - ள்.) பொருண்முதற் காரணமாம் நுண்ணிய மாயையினின்று வினைமுதற்காரணமாகிய விழுமிய முழுமுதல்வனால் உலகுடல் உலகியற் பொருள்கள் அனைத்துங் காரியமாய்த் தோன்றியுள்ளன; அத்தகைய வல்லாளன் மோன நிலையால் அழியா இன்பமாகடலாவன்; மாகடலே! அடியேன் பிறரால் மோன நிலையினேன் என்று சொல்லும் பொருட்டு மௌனம் மௌனம் என்று சொல்லிக்கொண்டதல்லாமல், மனமடங்கத் திருவடி முழு நிறைவில் தன்னை மறந்து ஆழ்ந்ததுண்டோ? அதற்குரிய சிவக்கல்வியினைக் கற்கும் பேறில்லாத முழு மூடனேன் இனி என் செய்வேன்? பொருண்முதற் காரணமென்றாலும் முதற்காரணம் என்றாலும் ஒன்றே. வினைமுதற் காரணமென்றாலும் நிமித்த காரணமென்றாலும் ஒன்றே.
(24)
ஆரணம் ஆகமம் எல்லாம் உரைத்த அருள்மவுன | காரண மூலங்கல் லாலடிக் கேயுண்டு காணப்பெற்றால் | பாரணங் கோடு சுழல்நெஞ்ச மாகிய பாதரசம் | மாரண மாய்விடும் எண்சித்தி முத்தியும் வாய்ந்திடுமே. |
(பொ - ள்.) வேதமும் ஆகமமும் எல்லாம் உரைத்தருளிய முழு முதல்வன் மௌன காரணமாகத் திகழும் கல்லால மரத்தடியில் வீற்றிருந்தருளும் சிவபெருமானாவன்; அம் முதன்மை அவனுக்கே உண்டு; அவ்வாலமர் செல்வனைத் திருவருளால் காணப்பெற்றால், மண், பெண் முதலிய பொருள்களின்மேல் வேட்கையுண்டாகி அதனால் மனம் ஒரு நிலைப்படாது பாதரசம் போன்று அங்கும் இங்குமாய் ஒடிக்கொண்டு திரிகின்ற நிலை மாண்டு மடிந்து கழியும்; கழியவே எண்பெரும் பேறும், மீளா வீடுபேறும் செம்மையாக வாய்க்கும்.
(25)
சித்த மவுனி வடபால் மவுனிநந் தீபகுண்ட | சுத்த மவுனி யெனுமூவ ருக்குந் தொழும்புசெய்து | சத்த மவுன முதல்மூன்று மவுனமுந் தான்படைத்தேன் | நித்த மவுனமல் லாலறி யேன்மற்றை நிட்டைகளே. |
(பொ - ள்.) வடபாலாகிய திருவெள்ளிமலையின்கண் வட ஆலின் கீழ் வீற்றிருந்தருளும் மவுனகுருவும், அடியேன் நெஞ்சமிசைக் குடிகொண்டருளும் மவுனகுருவும், அருண்மறையாகிய உப தேசம்புரிந்தருளும் பொருட்டுக் குண்டமண்டலங்கள் அமைத்து ஈண்டு வந்து ஆண்டுகொண்டருளிய மவுனகுருவும் ஆகிய மூவர் திருவடிக்கும் தொண்டு பூண்டு ஒழுகிச் சத்தமாகிய உரையும், எண்ணமாகிய உள்ளமும், செய்கையாகிய உடலும் ஆகிய மூன்றும் ஒருமுகப்பட்டு நன்னெறி வழியொழுகிச் செந்தமிழ்ச் சிவனடிக்கீழ் உறுதியுன் நிற்பதாகிய மோனநிலையினை அடியேன் பெற்றுள்ளேன். என்றும் பொன்றாது ஒன்றுபோல் நின்று உறுதி தருவதாகிய நித்த மவுனம் ஒன்றையல்லாமல் பிறிதொரு நிட்டையினையும் யானறியேன்.
(வி - ம்.) சித்த மவுனியால் உள்ளமும், வடபால் மவுனியால் உரையும், சுத்த மவுனியால் உடலும் சிவச் செயலாம் உண்மையும் திருவடிக்கே செல்லும் நன்மையும் பெறப்படும்.
(26)