தோன்றியவர். பிறந்த ஞான்றே பேருணர்வுடையராயினார். அரம்பையென்னும் தேவவுலகப் பொருட்பெண் இச் சுகமுனிவரைத் தன் மயக்கில் ஈடுபடும்படி மிக முயன்றனள். சுகமுனிவர் ஈடுபடாது இறைநிறைவிலழுந்தி நின்றனர்.
(46)
மறக்கின்ற தன்மை இறத்தலொப் பாகும் மனமதொன்றில் | பிறக்கின்ற தன்மை பிறத்தலொப் பாகும்இப் பேய்ப்பிறவி | இருக்கின்ற எல்லைக் களவில்லை யேஇந்தச் சன்மஅல்லல் | துறக்கின்ற நாளெந்த நாள்பர மேநின் தொழும்பனுக்கே. |
(பொ - ள்.) மனமானது ஒரு பொருளைக் கண்டபின் மறக்கு மாயின் அதுவே அம் மனத்திற்கு இறப்பு நிலையாகும். அதுபோல் ஒரு பொருளை நினைக்குமாயின் அதுவே அம்மனத்துக்குப் பிறப்பு நிலையாகும். (அதனால் மனம் அளவில்லாத முறை இறந்து பிறந்து வருதல் காணலாம்.) இவை போன்று எளியேன் பெற்றுள்ள பேய்ப்பிறவியாகும்; இப் பிறவிகள் கழிந்து கழிந்து மீண்டும் மீண்டும் பெறுவதற்கும் ஓர் அளவில்லை. இத்தகைய பிறப்புத் துன்பம் எளியேனைவிட்டு நீங்கி ஒளியும் நாள் எந்நாளோ? தனி முதலே, அடியேன் நின் நீங்காத் தொண்டனாவேன்;
(47)
காட்டிய அந்தக் கரணமும் மாயைஇக் காயமென்று | சூட்டிய கோலமும் நானா இயங்கத் துறையிதனுள் | நாட்டிய நான்றனக் கென்றோர் அறிவற்ற நான் இவற்றைக் | கூட்டிநின் றாட்டினை யேபர மேநல்ல கூத்திதுவே. |
(பொ - ள்.) தனிமுதற் பொருளே! புலன்களைத் தொடர்தற்குக் காட்டாகவுள்ள எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பு என்னும் அகக் கலன்கள் நான்கும் தூவா மாயையின் ஆக்கப்பாடுகளாகும். அம் மாயையின் காரியமே இவ்வுடம்பு; இவ்வுடம்பெனப் பெயர்சூட்டிய கோலமும், பலவகையாக இயங்கா நிற்கப் பற்பல துறைகளையுடைய இவ்வுடம்பினுள்ளே நிலைக்கச் செய்தது எளியேனோ? யான் எனக்கெனத் தனிமுதன்மையும் உரிமையும் உள்ள அறிவுடையனல்லன்; உடம்பையும் அடியேனையும் ஒன்றுகூட்டி உடனாய் நின்று அறிவுறுத்தி வருகின்றனையே, இத்தகைய கூத்து நல்லதொரு கூத்தாகும். தூவா மாயை - அசுத்தமாயை. அகக்கலன் - அந்தக்கரணம்.
(48)
பொல்லாத மாமர்க் கடமன மேஎனைப் போல்அடுத்த | எல்லாவற் றையும்பற்றிக் கொண்டனை யேயென்னை நின்மயமா | நில்லாய் அருள்வெளி நீநான்நிற் பேன்அருள் நிட்டையொரு | சொல்லாற் பதிந்து பரிபூர ணானந்தந் தோய்குவனே. |
(பொ - ள்.) எல்லாத் துன்பங்கட்கும் ஏதுவாகிய பொல்லாத மனமே, நீ பெரிய குரங்குத் தன்மையினை உடையையாயிருக்கின்றனை;