பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

443
நீ என்னைப் பேய்ப்பிடியாகப் பற்றியிருப்பது மட்டுமன்றி என்னைப் போல் என்னையடுத்துள்ள பல பொருள்களையும் பற்றிக் கொண்டுள்ளனை; இஃதென்ன மாயம்! நீ நிலைத்துக் கொண்டிருக்க வேண்டிய தன்மையாய் நிலைத்திருப்பாயாக. அஃது அருள் வெளியின் மயமாய் நிற்றலேயாம்! அங்ஙனம் நின்றால் யான் திருவருள் நிட்டையினை ஒரு மொழியினால் பதியப்பெற்று முழுநிறை இன்பம் மூழ்குவேன்; மர்க்கடம் - குரங்கு.

(49)
வாராய்நெஞ் சேயுன்றன் துன்மார்க்கம் யாவையும் வைத்துக்கட்டிங்
காராய் அடிக்கடி சுற்றுகின் றாயுன் அவலமதிக்
கோரா யிரம்புத்தி சொன்னாலும் ஓர்கிலை ஓகெடுவாய்
பாரா யுனைக்கொல்லு வேன்வெல்லு வேன்அருட் பாங்குகொண்டே.
     (பொ - ள்.) நெஞ்சே! என்முன் வருவாயாக; உன்னுடைய பொருந்தாத தீய வழிகள் யாவையினையும் ஒருபுறம் வைத்துக் கட்டுவாயாக; இங்கு யான் மொழிவதனை ஆராய்ந்து பார்ப்பாயாக; அடுத்தடுத்து ஒரு நிலைப்படாது உலகெங்கணும் சுற்றித் திரிகின்றாயே; உன்னுடைய நிலைபேறில்லாத குற்றம் பொருந்திய மதியினுக்கு அளவில்லாத அறிவுரைகள் சொன்னாலும், அவற்றை ஆராய்ந்து பார்க்கின்றாயில்லை; அதனால் நீ பெருங்கேட்டினையடைவாய். யான் திருவருட் பாங்கினைக் கைக்கொண்டு உன்னை அடக்கி யொடுக்குவேன்; அதனால் வெற்றியும் எய்துவேன்.

(50)
மாதத்தி லேயொரு திங்களுண் டாகி மடிவதைநின்
போதத்தி லேசற்றும் வைத்திலை யேவெறும் புன்மைநெஞ்சே
வேதத்தி லேதர்க்க வாதத்தி லேவிளங் காதுவிந்து
நாதத்தி லேயடங் காதந்த வான்பொருள் நாடிக்கொள்ளே.
     (பொ - ள்.) மிகவும் இழிவாகிய நெஞ்சமே, ஒவ்வொரு மாதமும் திங்கள் முறை முறையே பிறை பிறையாய் வளர்ந்து முழுநிலவாய்த் தோன்றுவதும், பின் அதுபோல் தேய்ந்து தேய்ந்து மறைவதும் காண்கின்றனையே, அதனுண்மையினை நின்னறிவில் ஒரு சிறிதுங் கொள்கின்றாயில்லை; வேதங்களாலும் ஏனைய அளவை முறைகளாலும் விளங்கிக் கொள்ள முடியாததும், தூமாயையின் நிலையாகிய ஒலி என்னும் நாதத்திலும், எழுத்தென்னும் விந்துவிலும் அடங்காததுமாகிய அந்தப் பெரும்பொருளாகிய தனிமுதற் சிவனை நாடிக்கொள்வாயாக.

     (வி - ம்.) திங்களொப்பு நிலையாமையினைக் காட்டுவதாகும். இவ்வுண்மை "வையங்காவலர்" எனத் தொடங்கும் புறநானூற்றுப் (8) பாட்டானுமுணர்க.

(51)
எங்கும் வியாபித் துணர்வாய் உனக்கென் இதயத்துள்ளே
தங்குந் துயரந் தெரியாத வண்ணந் தடைசெய்ததார்
அங்கங் குழைந்துள் ளுருகுமன் பாளர்க் கணைகடந்து
பொங்குங் கருணைக் கடலேசம் பூரண போதத்தனே.