பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

444
     (பொ - ள்.) உடம்பு குழைந்து உள்ளம் உருகி நிற்கும் மெய்யடியார்களை ஆட்கொள்ளும் பொருட்டு வரம்பில்லாத தண்ணளி சுரந்து பொங்கி வழியும் திருவருட்கடலே, எங்கும் ஒழிவற நிறைந்த ஒண் பொருளே, முற்றுமாயுள்ள பேரறிவினனே, இயற்கை உணர்வினனே, நீ எல்லாவற்றையும் ஒருங்குணர்வாய்; அடியேனுடைய மனத்தினுள் நீங்காது தங்கி வருத்தும் துயரத்தினை நின்திருவுள்ளத்துக்குத் தெரிய வொட்டாமல் தடை செய்துள்ளார் யாவர்?

     (வி - ம்.) ஆருயிர்களின் மலத்தடை யகற்றப்படின் அவ்வுயிர்கள் ஆண்டவனைக் காணும் பேறு பெறும். மாணவர்கள் முயன்று நன்கு கற்றால் வினாத் தோன்றலும் விடையிறுத்தலும் நிகழ்வன இதற்கொப்பாகும். இதுபோல் மக்கள் நன்னெறி நாற்படியினை வழுவாதொழுகின் பகலோன் முன் இருள்போல் மலத்தடை தானே அகலும்.

(52)
வையக மாதர் சகத்தையும் பொன்னையும் மாயைமல
மெய்யையும் மெய்யென்று நின்னடி யார்தம் விவேகத்தையும்
ஐயமில் வீட்டையும் மெய்ந்நூலை யும்பொய்ய தாகஎண்ணும்
பொய்யர்தம் நட்பை விடுவதென் றோபரி பூரணமே.
     (பொ - ள்.) எங்கும் ஒழிவற நிறைந்த ஒண்பொருளே, உலகத்துக் காணப்படும், மயக்குந் தன்மை வாய்ந்த பெண்களின் சிற்றின் பத்தையும், அதற்கு ஏதுவாகிய பொன்னையும், மாயாகாரியமாகிய அழுக்கு நிறைந்துள்ள தூயதல்லாத நிலையில்லாத இவ்வுடலையும் நிலையாயுள்ள மெய்ப்பொருள்களென்று தருக்கி நின் திருவடிக்கு நின் திருவருளால் மீளா ஆளாயுள்ள மெய்யடியார்தம் பொய்யிலா மெய்யுணர்வினையும், சிறிதும் ஐயத்திற்கு இடமில்லாது மெய்ம்மையாகக் காணப்படும் வீடுபேற்றினையும் செந்தமிழ்ச் சிவஞான போதமாகிய முப்பொருளுண்மையும் இயைபும் செப்பமுற ஓதும் உண்மை நூலையும் மறுத்துப் பொய்யதாகக் கூறிப் புலம்பித்திரியும் பொய்யர்தம் பொய்ந்நட்பைப் பொருந்தாமல் விட்டொழிவது எந்நாளோ?

(53)
அளியுங் கனியொத் தருவினை யால்நொந் தயர்வுறுவேன்
தெளியும் படிக்குப் பரிபாக காலமுஞ் சித்திக்குமோ
ஒளியுங் கருணையும் மாறாத இன்பமும் ஓருருவாய்
வெளிவந் தடியார் களிக்கநின் றாடும் விழுப்பொருளே.
     (பொ - ள்.) இயற்கைப் பேரொளித் தனிச்சுடரும், பெருந்தண்ணளியும் என்றும் பொன்றாப் பேரின்பமும் ஒருவடிவாய் வெளிப்பட்டருளி மெய்யடியார்கள் மேன்மேலும் இறவா இன்பம் எய்தும்வண்ணம் தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண் நிலையாக நின்றாடும் விழுமிய முழுமுதல்வனே, தானாகவே மிகக்கனிந்து காணப்படும் கனியினை யொத்து வெல்ல முடியாத இருவினைத் துன்பங்களினால் மிகவும் வருந்தி வாடித் துன்புறுகின்ற எளியேன் உய்யும்படியான செவ்வி வாய்ந்த பரிபாக காலமும் கைகூடுமோ?

(54)