பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

46

     (வி - ம்.) முதல்வனின் மெய்ம்மை இயல்பினை நீங்கா நிலையெனக் கூறுப. இதனை உண்மை எனவும் சொரூபம் எனவுங் கூறுப. அவன் திருவருளால் அவ்வப்போது மெய்யடியார் பொருட்டுக் கொள்ளும் கோல நிலையினை நீங்குநிலை யெனக் கூறுப. நீங்குநிலை யெனினும் சார்புநிலை யெனினும் ஒன்றே. இதுவே தடத்த நிலையாகும். இவ்வுண்மைகளெல்லாம் வரும் செந்தமிழ்த் திருமாமுறைகளானுணர்க :

"மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
    மயானத்தான் வார்சடையா னென்னி னல்லான்
 ஒப்புடைய னல்லனோ ருருவன் அல்லன்
    ஒரூரன் அல்லனோ ருவமன் இல்லி
 அப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும்
    அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
 இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
    இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே."
- 6. 97 - 10.
"பந்தமும் வீடும் ஆய பதபதார்த் தங்க ளல்லான்
 அந்தமும் ஆதி யில்லான் அளப்பிலன் ஆத லாலே
 எந்தைதான் இன்னன் என்றும் இன்னதாம் இன்ன தாகி
 வந்திடான் என்றுஞ் சொல்ல வழக்கொடு மாற்றம் இன்றே."
- சிவஞானசித்தியார், 1. 2 - 16.
"ஈறாகி அங்கே முதலொன்றாய் ஈங்கிரண்டாய்
 மாறாத எண்வகையாய் மற்றிவற்றின் - வேறாய்
 உடனாய் இருக்கும் உருவுடைமை யென்றுங்
 கடனா யிருக்கின்றான் காண்."
- திருக்களிற்றுப்படியார், 86.
"அதுபழச் சுவையென அமுதென அறிதற்
    கரிதென எளிதென அமரரும் அறியார்
 இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
    எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
 மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
    மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
 எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே."
- 8. திருப்பள்ளியெழுச்சி, 7.
(5)
இந்திரசா லங்கனவு கானலின்நீ ரெனவுலகம்
    எமக்குத் தோன்றச்
சந்ததமுஞ் சிற்பரத்தா லழியாத தற்பரத்தைச்
    சார்ந்து வாழ்க