திருவருளால் கண்டு கடைப்பிடித்தவர் பட்டினத்துப் பிள்ளையாராவர். அவர் மெய்ம்மையாகவே பற்றறுதல் எனப்படும் துறவினைப் பூண்டனர். முதற்கண் துறப்பது இல்லமாதலின், இல்லத்தையுந் துறந்தனர்; அதே நேரத்து மனத்துறவினையும் மேற் கொண்டனர். இங்ஙனம் புறத்தும் அகத்தும் ஒருங்குதுறப்பது எவர்க்கும் அருமையாதல்பற்றிப் பட்டினத்துப்பிள்ளையைப்போல் துறப்பது அரிதென்பது பெறப்பட்டது. மாணவனே அதுபோல் நீயும் இருவகைத் துறவினையும் ஒருங்கு கைக்கொள்ளுதல் வேண்டும். அன்றேல், முறையாகவேனும் உனக்கிசைந்தவாறு துறப்பாயாக.
(வி - ம்.) புறப்பொருள்களின் உண்மை அவை அனைத்தும் ஆண்டவனால் படைத்தளிக்கப்பட்டமையின் அவை அவன் உடைமையேயாம். இவ்வுண்மை புலனாயதும் ஒருவர்க்கு அவற்றின்கண் அவை தம்முடையன என்னும் பற்று வருவதற்கு வழியில்லை. உயிரின் உணர்வு ஆண்டவன் விளக்க விளங்குந் தன்மைத்தாகலின். அவ்வுயிர் அவனுக்கு யாண்டும் மீளா அடிமையேயாம். இம்முறையால் புறப்பற்றும் அகப்பற்றும் ஒருங்கு விட்டனர். அவர்தம் துறவு தலைசிறந்ததென்ப. ஆண்டவன்பால் மெய்ப்பற்றுடையார்க்கு அகத்துறவும் புறத்துறவும் உடனே அமையும்.
(57)
ஓராம லேஒருகால் உன்னாமல் உள்ளொளியைப் | பாராமல் உள்ளபடி பார்த்திருந்தால் - வாராதோ | பத்துத் திசையும் பரந்தெழுந்தா னந்தவெள்ளந் | தத்திக் கரைபுரண்டு தான். |
(பொ - ள்.) சுட்டுணர்விற்குப் புலனாம் பொருள்களை ஆராயாமலும் ஒருகால் நினைவு கொள்ளாமலும், உணர்வின் உள்ளொளியாகக் காணப்படும் திருவருட்சுடரை வேறுபட நோக்காமலும், ஒன்றாய்ப் புணர்ந்து அவ்வொளியுள் அடங்கி அவ்வொளியாய் நின்று உள்ளபடி கண்டிருந்தால் பேரின்பப் பெருவெள்ளம், தாவிக் கரை கடந்து. மேலெழுந்து பத்துத்திசைகளிலும் பரவி வந்து பாயாதோ? (பாயுமென்பதாம்.)
(58)
தானான தன்மைவந்து தாக்கினால் அவ்விடத்தே | வானாதி மாயை வழங்காதோ - ஞானாகேள் | உன்னுள்ளே தோன்றா வுறவாகி நின்றதென | என்னுள்ளே யென்று மிரு. |
(பொ - ள்.) (யாண்டும் எந்த வகையாலும் தனக்கொப்புப் பிறிதில்லை யென்று செருக்குறுவது யான் என்னும் அகப்பற்று, தன்னுடைய மனைவி மக்கள் செல்வமுதலியவற்றிற்கும் ஒப்பில்லை யென்று கருதுவது எனது என்னும் புறப்பற்று) யான் எனதென்னும் செருக்கு ஆங்காரத்தாலுண்டாவன. ஆங்காரம் ஆணவமுனைப்பால் எழுவன. அவ்வாங்காரம் எழவே உயிர்மூச்சு முதலிய காற்றுப்பத்தும் வெளிப்படும்; வெளிப்படவே வானமுதலாகச் சொல்லப்படும் மாயா காரியங்கள் வந்து சூழ்ந்து மயக்கும்; மெய்யுணர்வு கைவந்த மாணவனே